டெல்லி மாநகராட்சி தேர்தலில் தோல்வியுற்றதால் டெல்லி மாநிலத் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
டெல்லியில் ஒருங்கிணைந்த மாநகராட்சியின் 250 இடங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது. பாஜக இத்தேர்தலில் 104 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 9 இடங்களிலும் வெற்றி பெற்றது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதன் மூலம் டெல்லி மாநகராட்சி முதன் முறையாக ஆம் ஆத்மி வசம் சென்றுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு நடந்த டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக 181 இடங்களையும் ஆம் ஆத்மி 48 இடங்களையும் காங்கிரஸ் 27 இடங்களையும் வென்றிருந்தது. மேலும் 15 ஆண்டுகளாக நிர்வாகப்பொறுப்பில் இருந்த நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் பாஜக தோல்வி அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாஜகவிற்கு ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து டெல்லி மாநில பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆதேஷ் குப்தாவின் ராஜினாமா கடிதத்திற்கு ஒப்புதல் அளித்த பாஜக தலைமை இடைக்கால தலைவராக வீரேந்திர சச்தேவாவை நியமித்துள்ளது. வீரேந்திர சச்தேவா டெல்லி மாநில பாஜக துணைத் தலைவராக இருந்துள்ளார்.