சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆன பிறகு கடந்த சில நாட்களாக அவர் அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த கீழ்மட்ட அளவில் உள்ள கட்சியினருடன் தொடர்ந்து செல்ஃபோனில் உரையாடிவருகிறார். ‘நான் மீண்டும் அரசியலுக்கு வருவேன், கட்சியைக் காப்பற்றுவேன், கட்சி அழிவதைப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன், கட்சிக்காக நான் கடுமையாக உழைத்துள்ளேன்’. இப்படி பல்வேறு வசனங்களைப் பேசிவருகிறார். இதையடுத்து அதிமுக நிர்வாகிகள், கட்சிக்கும் சசிகலாவுக்கும் சம்பந்தமில்லை, கட்சிக்குள் குழப்பத்தை விளைவிக்க சசிகலா முயல்கிறார். எனவே மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி கட்சித் தலைமைக்கு அனுப்பிவருகிறார்கள் ஓபிஎஸ் - இபிஎஸ் உத்தரவின்படி.
இதையடுத்து கடந்த ஜூன் 7ஆம் தேதி சசிகலா குறித்து முன்னாள் சட்ட அமைச்சரும் தற்போதைய விழுப்புரம் மாவட்டச் செயலாளருமான சி.வி. சண்முகம் விழுப்புரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் பத்திரிகை ஊடகங்களின் முன்பு, “சசிகலா எங்கள் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு வேலைக்காரராக வீட்டுக்கு வந்தவர். அவர் வேலை முடிந்துவிட்டது அவர் வெளியே சென்றுவிட்டார். கட்சிக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. கட்சி அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களை நம்பியுள்ள கட்சி. கருவாடு கூட மீன் ஆகலாம், சசிகலா ஒருபோதும் அதிமுகவில் உறுப்பினராக கூட முடியாது” என்று மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துப் பேசினார்.
இதையடுத்து சசிகலாவின் தூண்டுதலின் பேரில் 500க்கும் மேற்பட்டவர்கள் சி.வி. சண்முகம் செல்ஃபோன் எண்ணில் தொடர்பு கொண்டும் சமூக வலைதளங்கள் மூலமும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவருவதாக கூறி கடந்த 9ஆம் தேதி திண்டிவனம் ரோசனை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், “வி.கே. சசிகலா குறித்து ஊடகங்களுக்கு சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளேன். அதற்கு வி.கே. சசிகலா நேரடியாக பதிலளிக்காமல் தன் அடியாட்களை வைத்து செல்ஃபோன் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக என்னை ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் பேசியும் பதிவிட்டும்வருகிறார்கள். மேலும் என் செல்ஃபோனில் அச்சுறுத்தும் வகையில் 500க்கும் மேற்பட்டவர்கள் கொலை மிரட்டல் விடுத்துவருகின்றனர். செல்ஃபோன் சமூக ஊடகங்கள் மூலம் எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது.
வி.கே. சசிகலா குறித்து பேசினால் உன்னையும் உன் குடும்பத்தையும் தொலைத்துவிடுவோம் எனவும் மிரட்டுகிறார்கள். இதற்கு வி.கே. சசிகலாவின் தூண்டுதலே காரணம். எனவே எனக்கு கொலை மிரட்டல் விடுக்கவும் ஆபாசமாக பேசவும் காரணமாக இருந்த வி.கே. சசிகலா மீதும் செல்ஃபோன் அழைப்புகள் மூலம் பேசி மிரட்டிய மர்ம நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவரது புகாரில் குறிப்பிட்டிருந்தார். அவரது புகாரின்படி வி.கே. சசிகலா உட்பட 501 பேர்கள் மீது சட்டப்பிரிவு 506 (1), 507, 109, 67 ஆகிய 4 சட்டப்பிரிவுகளின் படி ரோசனை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார். சசிகலா உட்பட 500 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழ்நாடு அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.