
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் இன்று (01.03.2025) திமுகவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினராலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2025 - 2026 ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளியில் சேருகின்ற மழலைகளின் சேர்க்கைக்கான சான்றிதழ்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான அறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது இந்தித் திணிப்பை எதிர்ப்போம் என உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார். இதனையடுத்து பெரியார் திடலில் தந்தை பெரியாருக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் தனது குடும்பத்தினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினார். கோபாலபுரத்தில் உள்ள அவரது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.
மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன் வழியில், திமுகவை வழிநடத்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களின் பேரன்பைப் பெற்று, திராவிட மாடல் நல்லாட்சி நடத்துவதுடன் மொழியுரிமை, மாநில உரிமைகளை வலியுறுத்தி, இன்று இந்தியாவே நேசிக்கும் மகத்தான தலைவராய் மிளிரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
‘இளைஞர் அணிதான் என் தாய்வீடு’ என்று பெருமிதம் பொங்கச் சொல்லும் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து எங்களை வழிநடத்த வேண்டுமென வாழ்த்துகிறோம். மக்கள்நலன் போற்றும் திராவிட மாடல் ஆட்சி 2026இல் மீண்டும் அமைந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகத் தொடர, இந்நன்னாளில் உறுதியேற்போம். தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.