
ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ள முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்திருந்தனர்.
அறந்தாங்கியில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்த ஒ.பன்னீர்செல்வத்திற்கு தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பி வரவேற்பு அளித்த நிலையில் அப்போது அங்கு தயாராக நின்ற பாஜக மகளிர் அணியை சேர்ந்த மூன்று பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது ஒ.பி.எஸ் தனது பாக்கெட்டிலிருந்து இருந்து சில 500 ரூபாய் தாள்களை எடுத்து ஆரத்தி எடுத்து வரவேற்ற பாஜக மகளிர் அணியை சேர்ந்த மூன்று பெண்களுக்கும் ரூ.1500 கொடுத்து விட்டு உள்ளே சென்றார்.
தேர்தல் விதிமுறைகளின் படி ஆரத்தி தட்டுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிற நிலையில் அறந்தாங்கியில் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ஒ.பன்னீர்செல்வம் பணம் கொடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியானதையடுத்து ராமநாதபுரம் தொகுதி அறந்தாங்கி பகுதி தேர்தல் ஒளிப்பதிவு கண்காணிப்பு அருள் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே கூட்டம் நடத்தியிருப்பதாகவும் பிரச்சனை கிளம்பியுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.