முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு விசிட்டுக்கு பிறகு தெளிவு பிறக்கும் என எதிர்பார்த்த கோவை தி.மு.க.வினர் மேலும் குழப்பமடைந்துள்ளனர். கோவை புறநகர் கிழக்கு மாவட்டத்திற்கு துளியும் தொடர்பில்லாத, கோவை மாநகருக்குள் குடியிருக்கும் மருதமலை சேனாதிபதியை மாவட்ட பொறுப்பாளர் ஆக்கியதும், தாழ்த்தப்பட்ட மக்களின் குடிசைகளை எரித்ததாக அறியப்படும் பையா கவுண்டர் என்ற கிருஷ்ணனுக்கு மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டதும்தான் இதற்கு காரணம்.
இந்த இருவரின் நியமனத்திற்கு பின்னணியில் சுப்பு என்பவர் இருப்பதாக கட்சிக்குள் பேசப்படுகிறது. யார் இந்த சுப்பு? என அவரை அறிந்த தி.மு.க.வினரிடம் கேட்டோம். "ஒரு பத்திரிகையின் ஃபோட்டோகிராபராக அறியப்பட்டவர் சுப்பு. 90களில் காந்திநகரில் சின்ன மளிகைக்கடை நடத்திவந்த சுப்பு, தி.மு.க. ஆதரவு பத்திரிகையின் ஃபோட்டோகிராபராக இருக்கும் முஸ்லீம் ஒருவர் மூலமாக போட்டோ எடுக்க கற்றுக்கொண்டார். அந்த ஃபோட்டோகிராஃபர் மூலமாக அ.தி.மு.க. முக்கியப் பிரமுகர்களின் நெருக்கமும் கிடைத்து, சுப்புவின் கல்லா நிரம்பியது. 1998 கோவை குண்டுவெடிப்புக்குப் பின், கோவை சிறையில் இருந்த கேரளாவின் மதானியை சந்திக்கவரும் அவரது மனைவியிடம், குண்டுவெடிப்பில் எப்படியெல்லாம் முஸ்லீம்கள் இறந்தார்கள் என்பதற்கான போட்டோக்களைக் கொடுத்தார். இதில் சுப்புவுக்கு லட்சங்களில் பணம் கொட்டியது.
உளவுத்துறை கண்காணித்த வேளையில் பொங்கலூர் பழனிசாமியிடம் அடைக்கலம் ஆகி, தி.மு.க. பிரமுகர்களுடன் நெருக்கம் ஏற்படுத்திக்கொண்டார். ஸ்டாலின், உதயநிதி நிகழ்ச்சிகளை கவர்செய்து அவர்களின் குட்புக்கிலும் இடம்பிடித்தார்.
அதனை வைத்துதான் சேனாதிபதிக்கும், பையா கவுண்டருக்கும் போஸ்டிங் கிடைப்பதற்கு துணை நின்றிருக்கிறார். மருதமலை சேனாதிபதியின் புதுவீடு திறப்பு விழாவுக்கு உதயநிதியை வரவழைத்ததோடு, அவர் கிளம்பியதும் அ.தி.மு.க.வினரையும் வரவைத்தது சுப்புதான். தி.மு.க.விலிருந்து வெளியாகும் ரகசிய செய்திகளை அ.தி.மு.க. பிரமுகர்களிடம் கசிய விடுவதும் இந்த உளவாளிதான். இதெல்லாம் தளபதிக்கு எப்போதுதான் தெரியப் போகிறதோ?'' என்றார்கள் குமுறலான குரலில்.
இதுகுறித்து ஃபோட்டோகிராபர் சுப்புவிடம் விளக்கம் கேட்டபோது, "நான் பத்திரிகையின் ஃபோட்டோகிராபர் மட்டும்தான். வீணாக என்மேல் பழி போடுகிறார்கள். அ.தி.மு.க. பத்திரிகையின் ஃபோட்டோகிராபர் சொல்லி, தி.மு.க.வில் போஸ்டிங் போடுவார்களா? மதானி தரப்புக்கு நான் போட்டோ கொடுத்ததாக சொல்வ தெல்லாம் பொய்'' என்றபடி போனை கட் செய்துவிட்டார். கட்சிக்குள் உளவாளிகள் அதிகரித்திருப்பதாக தமிழகம் முழுவதும் உ.பி.க்களிடம் குமுறல் வெடிக்கிறது.