முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் மிகச் சிறப்பான பணிகளை மேற்கொள்வதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை நந்தனம் மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு தேசிய அளவில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்னை வந்துள்ளனர்.
இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகச் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகிறார். 14 வயதில் கோபாலபுரத்தில் சில நண்பர்களை சேர்த்துக்கொண்டு இளைஞர் அணியை தொடங்கியவர். 1976ல் அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து போராடியதற்காக சிறை சென்றவர் ஸ்டாலின். விளையாட்டுத்துறையிலும் ஆர்வம் கொண்டவர். தன்னை நாத்திகவாதியாக காட்டிக் கொண்டாலும் அவர் எந்த மத நம்பிக்கைகளுக்கும் எதிரானவர் அல்லர். சமூகநீதி மற்றும் சீர்திருத்தத்தில் அவரது பார்வையை பாராட்டுகிறேன்.
திமுக அரசு பதவியேற்ற இரு வருடத்திலேயே 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கியுள்ளது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்னும் திட்டத்தின் மூலம் மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வினை கண்டு வருகிறார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து துணை நின்றவர் மு.க.ஸ்டாலின்” எனக் கூறியுள்ளார்.