சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் இன்று (09/07/2021) மாலை 05.00 மணிக்கு மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கான காரணங்கள், அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலருடன் சசிகலா தொடர்ந்து பேசி வருவது குறித்தும், உள்ளாட்சித் தேர்தல், கட்சியின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்தும் நிர்வாகிகளிடம் ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், மக்கள் படும் துயரங்களை மனதிற்கொண்டு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலைகளைக் குறைக்க மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டும். ஆட்சிக்கு வந்தவுடன் விலைகளைக் குறைப்பதாகத் தந்த வாக்குறுதியை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும். சட்டமன்றத் தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 என்ற வாக்குறுதியை நிறைவேற்றாவிடில் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேகதாதுவில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டப்படுவதைத் தடுக்க வேண்டும். காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான உரிமையை மாநில அரசு காக்க வேண்டும். எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.