கடலூர் மாவட்டத்தில் அதிமுக, பகுஜன் சமாஜ் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி ஏராளமானோர் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி முன்னிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் காமராஜர் சிலை அருகில் இணைந்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, "இலங்கை ராணுவம் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்க மத்திய மோடி அரசு இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான முடிவெடுக்க வேண்டும்.
மேகதாது பிரச்சனையில் கர்நாடக அரசு அணை கட்டித் தண்ணீரைத் தடுப்பது என்பது கண்டனத்திற்குரியது. இது சம்பந்தமாக டெல்லியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார். இது சம்பந்தமாக அவர்களும் உறுதிமொழி தந்துள்ளனர். இது காப்பாற்றப்படும் என்று நினைக்கிறோம். இல்லையென்றால் தமிழக காங்கிரஸ் வன்மையான கண்டனத்தையும் நடவடிக்கையும் எடுக்க நேரிடும்.
மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் கச்சா எண்ணெய் விலை 100 டாலராக இருந்தபோது 70 ரூபாய்க்குப் பெட்ரோல் விற்பனை செய்தது. இன்று உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 50 டாலராக இருக்கும் நிலையில், 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது தவறு. பொருளாதாரம் தெரியாத காரணத்தினால் ஏராளமான கலால் வரியை பெட்ரோல் டீசல் மீது இவர்கள் விதிக்கின்றனர். நாடு வளமாக இருப்பதற்கு வரி விதிப்பு மட்டுமே காரணமாக இருக்க முடியாது. வரியை வைத்துக்கொண்டு மட்டுமே ஒரு நாட்டை வளமாக வைத்திருக்க முடியாது. எனவே இவர்கள் வரி விகிதாச்சார முறையை மாற்றியமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவிக்கிறது. நாங்களாக இருந்தால் பெட்ரோல் டீசல் விலையை ரூ. 70க்கு விற்க முடியும். அதற்கான பொருளாதார திட்டம் எங்களிடம் உள்ளது" என்றார்.
அவரிடம் மத்திய அமைச்சரவை புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பது பற்றி கேட்டதற்கு, "அது இயல்பான ஒரு செயல். இது தேர்தலுக்காக அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கருத்து சொல்ல வேண்டிய அம்சம் இல்லை" என்று அழகிரி கூறினார்.