நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., தலைமையிலான கூட்டணிகள் மூலம் தமிழக தேர்தல் களம் மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது. இதற்கிடையே மார்ச் 20 தேதி முதல் தொடங்கிய வேட்புமனு தாக்கல் கடந்த 27 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.இதனைத் தொடர்ந்து வேட்புமனுதாக்கலை திரும்ப பெறுவதற்கான அவகாசம் நேற்றுடன் (30.03.2023) நிறைவு பெற்றது.
அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் இன்று (31.03.2024) மாலை நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் ஈரோடு, கரூர் மற்றும் நாமக்கல் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இத்தகைய சூழலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை ஈரோட்டில் உள்ள சின்னியாம்பாளையத்தில் நடைப் பயிற்சி மேற்கொண்டார். அப்போது சம்பத் நகர் மற்றும் அங்குள்ள உழவர் சந்தையில் நடந்து சென்று வணிகர்களையும், பொதுமக்களையும் சந்தித்து ஈரோடு மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து வாக்கு சேகரித்தார். மேலும் பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.