உழைப்பாளர் தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் இருக்கும் நினைவுச் சின்னத்திற்கு சிவப்பு சட்டை அணிந்து வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, எம்.பி. ஆ.ராசா ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சோசியலிச தலைவர்கள் 1889 ஆம் ஆண்டு கூடி மே 1 ஆம் நாளை தொழிலாளர் வர்க்க ஒருமைப்பாட்டு ஆர்ப்பாட்டத்திற்கான உலக நாளாக அறிவித்தார்கள். சிங்காரவேலர் முயற்சியால் தமிழ்நாட்டின் சென்னை கடற்கரையில் 1923 ஆம் ஆண்டு மே நாள் முதன்முதலாகக் கொண்டாடப்பட்டது. பின் சோவியத் சென்று வந்த தந்தை பெரியார் மே தினத்தை கொண்டாடத் தொடங்கினார். அனைவரையும் தோழர் என அழைக்கச் சொன்னார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மொழிபெயர்த்து தனது குடியரசு இதழில் வெளியிட்டார். பெரியாரும் சிங்காரவேலரும் இணைந்து செயல்பட்டனர்.
1969ல் கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் தொழிலாளர் நலத்துறை உருவாக்கி தனி அமைச்சகத்தை உருவாக்கினார். 1969 ஆம் ஆண்டில் மே தினத்தை சம்பளத்தோடு கூடிய பொது விடுமுறை நாளாக அறிவித்தார். தொழிலாளர்கள் ஓய்வு பெறும் போது அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல் பணிக்கொடை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியதும் திமுக தான். தொழில் விபத்து நிவாரண நிதி, கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தோடு விவசாயிகள் நல வாரியம், மீனவர் நல வாரியம், மகளிர் நல வாரியம், மாற்றுத்திறனாளிகள் நல வாரியம், கிராமக் கோவில் பூசாரிகள் நல வாரியம் உள்ளிட்ட 36 அமைப்பு சாரா நல வாரியங்களை உருவாக்கித் தந்தது திமுக. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது தான் நமது கொள்கை. அதுவே நமது அடித்தளம்.
சமீபத்தில் தொழிற்சாலை சட்ட முன்முடிவு பற்றி ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகளை ஈர்த்திட வேண்டும். அதன்மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தென் மற்றும் வட மாவட்டங்களில் அந்த வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் தான் தமிழ்நாடு அரசால் ஒரு சட்ட முன்முடிவு கொண்டு வரப்பட்டது. அது பல்வேறு கோணங்களில் விமர்சனம் செய்யப்பட்டது. திமுக கொண்டு வந்த சட்டத்திருத்தமாக இருந்தாலும் திமுக தொழிற்சங்கமே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதுதான் வேடிக்கை. அதற்காக அவர்களை பாராட்டவும் கடமைப்பட்டுள்ளேன். திமுக ஜனநாயக மாண்பு கொண்ட அமைப்பு என்பதற்கு இது எடுத்துக்காட்டு.
இது அனைத்து தொழிலாளர்களுக்குமான சட்டத்திருத்தம் அல்ல. சில குறிப்பிட்ட தொழிற்சாலைகளுக்கு மட்டும் நிபந்தனைகளுடன் அரசின் கட்டுப்பாடுகளுடன் அந்த விதிவிலக்கு வழங்கப்படும் என்பதே அந்த சட்டத்திருத்தம். தொழிலாளர் நலன்களை பாதுகாக்கும் பல்வேறு அம்சங்கள் அதில் இருந்தது. ஆனால், தொழிற்சங்களை சார்ந்தவர்களுக்கு சில சந்தேகங்கள் இருந்தன. விமர்சனம் எழுந்ததும் தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அதன் பின் தொழிற்சங்கங்களின் கருத்துகளை ஏற்று துணிச்சலோடு அதைத் திரும்பப் பெற்றுள்ள அரசு திமுக தான். விட்டுக்கொடுப்பதை நான் என்றும் அவமானமாகக் கருதியது இல்லை. அதை பெருமையாகக் கருதுபவன். சட்டத்தை கொண்டு வருவது துணிச்சல் என்றால், அதனைத் திரும்பப் பெறுவதும் துணிச்சல் தான்” எனக் கூறினார்.