தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் தேர்தல் நடத்தை வழிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''இன்னைக்குப் பெண்கள்தான் நமது ஆடைகளைத் துவைத்துப் போடுகிறார்கள். நம்முடைய துணியையெல்லாம் துவைப்பது பெரிய சுமை. துணி துவைக்கிறவங்களுக்குத்தான் அந்தக் கஷ்டம் தெரியும். எனவே அந்தச் சுமையில் இருந்து பெண்களை விடுவிக்க, மீட்டெடுக்கவே அதிமுக அரசு எல்லா அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வாஷிங் மெஷின் வழங்கப்படும் என்ற உறுதியைக் கொடுத்துள்ளோம். குலவிளக்கு திட்டத்தில் மாதந்தோறும் 1,500 ரூபாய் வழங்கப்படும்'' என்றார்.
மேலும் பேசிய அவர், ''பல பொதுக்கூட்டங்களில் பேசிவருவதால் தொண்டை சரியில்லை. திமுகவை வீழ்த்த வேண்டுமென்றால் என் உயிரைக் கொடுக்கவும் தயார்'' என்றார்.