பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனில் அவரது உருவ சிலைக்கு மரியாதை செலுத்திய கழக ஒருங்கிணைப்பு குழுவைச் சார்ந்த வா.புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்கள் மத்தியில் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தை காண்பித்து பேசியதாவது “கடிதத்தில் நீண்ட நாட்கள் கோரிக்கையாக பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் உள்ளது. இந்திய மக்கள் குறிப்பாக தென் தமிழக மக்கள் கடவுளாக நினைத்து போற்றி புகழக்கூடிய முத்துராமலிங்க தேவர் வரலாற்றில் இடம்பெற்றவர், பல போராட்டங்களை கண்டவர், மக்களின் உரிமைகளுக்காக போராடியவர் சுதந்திரப் போராட்ட தியாகி வீரர் நேதாஜியின் சீடராக விளங்கிய அவர் சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
சுதந்திர போராட்ட தியாகி என பல பதவிகளை வகித்தவர், தனது சொத்துக்களை விற்று பட்டியலின மக்களுக்காக கொடுத்து அழகு பார்த்தவர். இப்படிப்பட்ட தலைவரின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. நான் இங்கே எச்சரிக்க வரவில்லை உடனடியாக தேவர் பெயரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும், இல்லையேல் மத்திய அரசு மக்களுடைய எதிர்ப்பு குரலுக்கு உள்ளாகும், வெறுப்பிற்கு ஆளாகும். ஆகவே உடனடியாக இதனை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை.
அடுத்த பிறந்தநாள் காண்பதற்குள் உடனடியாக மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் பெயர் சூட்டப்படும் என்று நம்புகிறோம் என விளக்கி பேசினார். மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்து மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் சூட்ட முயற்சி மேற்கொள்ள வேண்டும் என பேசினார்.