கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டம் தமிழக அரசால் துவங்கப்பட்டு பிப்ரவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது. இத்திட்டத்தின் படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு தமிழக அரசு அறிவித்த திட்டங்கள் எந்த அளவில் நடைமுறையில் உள்ளது மற்றும் மாவட்டத்தின் சட்ட ஒழுங்கு இன்ன பிற செயல்முறைகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.
இத்திட்டத்தின் முதல் கள ஆய்வுப் பயணமாக, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பிப்ரவரி 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் தகவல்கள் திரட்டப்பட்டு அது மாவட்ட அரசு அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டு பிரச்சனைகள் குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த கள ஆய்வுப் பயணத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள், தொழில் அமைப்புகள் போன்றவற்றுடனும் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில், மார்ச் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மார்ச் 5 மற்றும் 6 என இரு தினங்களில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி மண்டலங்களுக்கான கள ஆய்வு நடைபெற உள்ளது. இரு தினங்களிலும், ஆய்வு செய்ய உள்ள மாவட்டங்களில் தமிழக அரசின் திட்டங்கள் எந்த அளவில் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது, சட்ட ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது.