!["Ask Annamalai if there is an answer to what your brother is asking" Seeman](http://image.nakkheeran.in/cdn/farfuture/3AoaB73YL-6CbCnC-77w7vEbxhSJwzhftuK727eD20Q/1673177716/sites/default/files/inline-images/503_27.jpg)
தமிழ்நாட்டில் வாக்கு வாங்க வேண்டுமானால் நான் பேசும் அரசியலைத்தான் பேசியாக வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமையகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆளுநர் தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்கிறார். எல்லோரும் சொல்வதை எல்லோரும் கேட்க வேண்டும் என்பது இல்லை. ஆளுநரை சொல்லச் சொல்கிறார்கள். அவரும் சொல்லுகிறார். இது என் நாடு; தமிழ்நாடு. இதுமட்டுமல்ல., அவர்கள் சொல்லுகிற இந்தியாவும் என் நாடு; பாரத நாடு; பைந்தமிழர் நாடு. வேண்டுமானால் என்னுடன் அவரை தர்க்கத்துக்கு வரச் சொல்லுங்கள். ஆளுநரும் நானும் நேருக்கு நேர் பேசுகிறோம்.
இமயத்தில் கொடியை நட்டான் இமயவர்மன் நெடுஞ்சேரலாதன் என்று வரலாறு இருக்கிறது. ஊரார் நாட்டில் போய் அவர் கொடியை நட்டு இருக்க முடியுமா. தொன்மை நூல்கள் அனைத்தும் பாரதம் தமிழ்நாடு எனக் கூறுகிறது. நாங்கள் என்ன இதையெல்லாம் பொய்யாக சொல்லிவிட்டா சென்றோம். இந்த நிலப்பரப்பு முழுதும் வாழ்ந்தவர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்தான். இது தமிழர்களின் தேசம்தான். எங்களுடைய மூதாதைகளின் மொழி கூட தமிழ்தான். இதை நான் கூறவில்லை. இதை அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ளார். அதற்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்.
இதுவரை பாரத மாதாக்கு ஜெய் என முழக்கமிட்ட நீங்கள், ஏன் இப்பொழுது தமிழ்த்தாய் விருது கொடுக்கின்றீர்கள். பாரத மாதாவிற்கு உடல்நிலை சரியில்லையா. உங்கள் அண்ணன் இப்படி கேட்கின்றார். அதற்கு ஏதாவது பதில் வைத்துள்ளீர்களா என நீங்கள் அண்ணாமலையிடம் இதைப் போய்க் கேட்கிறீர்களா? ஏன் பாரத மாதாவை விட்டுவிட்டு வந்துவிட்டீர்கள் என. ஏனென்றால் இங்கே வாக்கு வாங்க வேண்டுமானால் நான் பேசுவதைத்தான் பேசியாக வேண்டும். அதனால் ஆளுநர் அவர்களிடம் சொல்லுங்கள். தமிழர்கள் உலகத்திற்கு அறிவைக் கடன் கொடுத்த கூட்டம். நீங்கள் வந்து எங்களுக்குப் போதிக்கக்கூடாது. நீங்கள் சொன்னால் நாங்கள் கேட்க வேண்டுமா?” எனக் கூறினார்.