Skip to main content

நடராஜர் கோவில்: “திமுக கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” - அண்ணாமலை எச்சரிக்கை

Published on 29/06/2023 | Edited on 29/06/2023

 

Annamalai warns DMK for intervenes in the Nataraja temple issue

 

நடராஜர் கோவில் விவகாரத்தில் திமுகவின் செயல்பாடுகள் இந்து சமயத்திற்கு எதிராக மட்டும் அல்ல, அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் எதிரானது என பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடராஜர் கோவிலின் வழிபாட்டு நடைமுறைகளை சிதைக்கும் வகையில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது. வருடாவருடம் நடைபெறும் ஆனித் திருமஞ்சனம் விழாவின் கடைசி நான்கு நாட்களுக்கு சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கனகசபை பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படாது என்பது அனைவரும் அறிந்ததே. இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இல்லாத சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசு கட்டுப்படுத்த நினைப்பது பக்தர்களை மட்டும் அல்ல, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என்பதை அரசு அதிகாரிகளும் அமைச்சரும் நினைவில் கொள்ள வேண்டும்.

 

சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சிதம்பரம் தீட்சிதர்கள் இந்து சமயத்தின் ஒரு உட்பிரிவு என்றும், சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாக அதிகாரம் தீட்சிதர்களுக்கு மட்டுமே உள்ளது என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர். இதனை எதிர்த்து 1953 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாண அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், 1959 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை சட்டவிதி 107ன்படி இந்து சமயத்தின் உட்பிரிவுகள் நிர்வகிக்கும் கோவில்களில் தமிழக அரசுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்பதை மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

 

இன்று நடக்கும் அத்துமீறல் போல் முந்தைய திமுக ஆட்சியிலும் சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர 2009 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு வெளியிட்ட அரசாணை சட்டத்திற்குப் புறம்பானது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசால் இந்த அரசாணை திரும்பப் பெறப்பட்டது. 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தொடர்ச்சியாக நிர்வாக இடைஞ்சல் ஏற்படுத்தி கோவிலை அறநிலையத்துறை கைப்பற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள நகைகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற அரசின் கோரிக்கை தீட்சிதர்களால் ஏற்கப்பட்டு அரசால் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாமல் விரக்தியில் இருந்த இந்தத் திமுக அரசு, தொடர்ச்சியாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் எதோ ஒரு பிரச்சினையை உருவாக்க வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

 

அதிகார வரம்பை மீறும் செயலாக சென்ற ஆண்டு மே மாதம் தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. கனகசபை மீது அனைவரும் ஏறி வழிபடலாம் என்ற அறிவிப்புடன் வெளியான அந்த அரசாணையைக் கூட தீட்சிதர்கள் எதிர்க்கவில்லை. ஆனித் திருமஞ்சனம் விழாவின் போது கோவில் நகைகள் அனைத்தும் தில்லை நடராஜருக்கு அலங்காரமாக அணிவிக்கப்படுவதால் பாதுகாப்புக் காரணங்களுக்காக நான்கு நாட்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக அதிகாரத்தின் கீழ் இல்லாத ஒரு கோவிலில் அத்துமீறி நுழைந்து கோவில் நடைமுறையில் தலையிட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

 

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 3500 ஏக்கர் நிலத்தைப் பராமரித்து வரும் தமிழக அரசின் சிறப்பு வட்டாட்சியர் கடந்த 15 ஆண்டுகளாக அந்த நிலத்தின் மூலமாக வந்த வருவாய் கணக்குகளை தெரிவிக்கவில்லை என்றும், கடந்த 15 ஆண்டுகளாக அந்த நிலத்தின் மூலமாக வரும் வருவாயை சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் செலுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டு உள்ளது. இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலளிக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் உள்ள 37000க்கும் மேற்பட்ட கோவில்களின் வருவாய் செலவினங்களை தனியார் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்ற மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கூட மதிக்காமல் செயல்பட்டு வரும் அமைச்சர் சேகர்பாபு, தனது அதிகார வரம்பை உணர்ந்தால் நன்று.

 

இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்படுவதை கை கட்டி வேடிக்கை பார்ப்பதையும், ஆட்சியின் அவலங்களை மறைக்க கோவில்களில் புதுப்புது பிரச்சனைகளை உருவாக்குவதையும் திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும். திமுகவின் செயல்பாடுகள் இந்து சமயத்திற்கு எதிராக மட்டும் அல்ல, அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் எதிரானது. இந்து சமயத்தின் புனிதமான எந்தக் கோட்பாட்டின் மீதும் நம்பிக்கை இல்லாத நாத்திகத்தைப் பரப்பி இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தும் கூட்டத்திற்கு அடைக்கலமாகத் திகழும் திமுக, சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகத்தில் இதற்கு மேலும் தலையிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.