Skip to main content

பரபரக்கும் அதிமுக... விஜயகாந்தை சந்தித்த அமைச்சர்கள்!

Published on 27/02/2021 | Edited on 27/02/2021

 

admk ministers meet dmdk vijayakanth at chennai

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் அக்கட்சி கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

 

குறிப்பாக, அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பா.ஜ.க.வின் தமிழகத் தேர்தல் பொறுப்பாளர்களான மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி, மத்திய சாலை போக்குவரத்து இணையமைச்சர் வி.கே.சிங் மற்றும் மாநில பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், பா.ஜ.க.வின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் சந்தித்து தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்துடனும் பா.ஜ.க. குழுவினர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். 

 

அதேபோல், பா.ம.க.வுடன் அ.தி.மு.க. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, சென்னையில் லீலா பேலஸ் ஓட்டலில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், பேசிய அ.தி.மு.க. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், "அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள பா.ம.க.வுக்கு 23 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பா.ம.க. போட்டியிடும் 23 தொகுதிகளின் விவரம் பேச்சுவார்த்தைக்குப் பின் அறிவிக்கப்படும்" என்றார். 

 

மேலும், பா.ம.க.வுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டு தொகுதிப் பங்கீடு ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. சார்பில் மருத்துவர் ராமதாஸ், ஜி.கே.மணி ஆகியோர் கையெழுத்திட்டனர்.  

 

இந்த நிலையில் தே.மு.தி.க. கட்சியின் நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளரும், நடிகருமான விஜயகாந்தை அவரது இல்லத்தில் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி ஆகியோர் சந்தித்தனர். 

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை இறுதிசெய்ய அ.தி.மு.க. தீவிரம் காட்டி வரும் நிலையில், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை அ.தி.மு.க. தலைமை இறுதிசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்