இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ''இன்று தமிழக அரசு செயல்பாடுகள் மக்களுக்குத் திருப்தி இல்லாமல் இருக்கிறது. எங்களுடைய காலத்தில் அரிசி தரமாக இருந்தது. கொடுக்கப்பட்ட பொருட்கள் தரமாக இருந்தன. என்னுடைய பதவிக்காலத்தில் நான் எங்கேயும் போனதில்லை. என் குடும்பத்தையே நான் பார்த்ததில்லை. முழுக்க முழுக்க துறையே தான். ஏனென்றால் என்னிடத்தில் அந்தப் பதவியை ஜெயலலிதா கொடுக்கும்பொழுது என்னிடம் என்ன சொன்னார்கள் என்றால் ''ராஜு நம்முடைய அரசுக்கு நல்ல பெயர், நமக்கும் கட்சிக்கும் நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்றால் உங்கள் துறையில்தான் இருக்கிறது. இந்த துறையில் வேறு ஏதும் கிடைக்காது என்றாலும் மக்களுக்கு சேவையாற்றுகின்ற ஒரு அருமையான துறை. இந்த துறையின் மூலம் நீங்கள் கொடுக்கின்ற செயல் திட்டத்தின் மூலமாகத்தான் நமது அரசுக்கும், நம்முடைய கட்சிக்கும் பேர் கிடைக்கும். எனவே உங்களை நம்பி இந்தத் துறையை உங்களிடம் ஒப்படைக்கிறேன். இதை நீங்கள் சிறப்பாகச் செய்வீர்கள்'' என்று சொன்னார்.
அதனடிப்படையில் மாதந்தோறும் ஆய்வுகள் செய்வோம். கரோனா காலத்தில் எடப்பாடி பழனிசாமி பத்து மாதங்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மக்களின் பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எந்த சிரமமும் ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில் முதலில் ஆயிரம் ரூபாய் கிராமங்களில் வழங்கினார். நகரப்புறங்களில் 2000 ரூபாய் வழங்கினார். இது முழுக்க முழுக்க முழுக்க யாரும் இழக்காத அளவிற்கு, யாரும் விடுபடாத அளவிற்கு வழங்கப்பட்டது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடு என்பது ஆய்வுக்கு உட்பட்டது. ஆய்வு செய்துதான் இதில் முடிவு எடுக்க வேண்டும். ஆய்வு செய்து தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. என்ன என்பதை எதிர்காலத்தில் பார்ப்போம்'' என்றார்.
அப்பொழுது தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்விக்கு, ''அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எக்ஸ்பிரஸ் டெல்லியை நோக்கிப் புறப்பட்டு விட்டது. இதில் ஏறுகிறவர்கள் டெல்லிக்குப் போகலாம். இதில் ஏறாதவர்கள் அவரவர்கள் ஊரிலேயே இருக்கலாம். என்றும் அதிமுக தான் கூட்டணியில் தலைமை ஏற்கும். இது இன்றல்ல நேற்றல்ல தந்தை பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா எனத் தொடர்ந்து இப்படித்தான் நடக்கிறது. எங்களை நம்பி வருபவர்களை நாங்கள் கை தூக்கி விடுவோம்'' என்றார்.