Skip to main content

“பேனா சிலைக்கு செலவழிக்கும் அரசு தானியங்களை பாதுகாக்காதா?” - ஓபிஎஸ் கண்டனம்

Published on 20/06/2023 | Edited on 20/06/2023

 

"Doesn't the government protect the grains that Pena spends on idols?" - Condemnation of OPS

 

விவசாயிகள் விற்பனைக்காகக் கொண்டு வரும் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்கத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு தி.மு.க. அரசை முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்தல் மற்றும் தரமான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமோலின் எண்ணெய் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை கொள்முதல் செய்து பாதுகாப்பான முறையில் சேமித்து வைத்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசிற்கு உள்ளது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில், கொள்முதல் செய்த உணவு தானியங்களை பாதுகாப்பான முறையில் சேமித்து வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

 

கடந்த இரண்டு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் திறந்தவெளி களத்தில் வைக்கப்பட்டதன் காரணமாக அவ்வப்போது மழையில் நனைந்து சேதமடைந்து வருகின்றன. இது குறித்து நானும் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறேன். அரசுத் தரப்பிலும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்படுகிறது. இருப்பினும், மழையில் நெல் மூட்டைகள் நனைவது என்பது தொடர்கதையாக இருந்து வருகிறது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நெல் மூட்டைகளை எடுத்து வருவதாகவும், ஒரு நாளைக்கு ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் விவசாயிகள் நெல்லை கொண்டு வரக்கூடிய நிலை உள்ளதாகவும், விற்பனை கூடத்திற்கு அருகே உள்ள தெருக்களில் நெல் மூட்டைகளை வைத்து, அவற்றை விற்பனை செய்வதற்காக இரண்டு, மூன்று நாட்கள் காத்திருப்பதாகவும், நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்கும் வகையில், இந்த இடத்தில் பாதுகாப்பான கிடங்குகள் கட்டித் தரப்படும் என்று தேர்தல் சமயத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் அங்கு பாதுகாப்பான இடம் அமைப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை என்று மேற்படி விற்பனைக் கூடத்தை நம்பியிருக்கும் விவசாயிகள் கூறுகின்றனர்.

 

நெல் மூட்டைகளை சேமித்து வைக்க பாதுகாப்பான இடம் இருந்தால்தான் தரமான அரிசி மக்களை சென்றடைய முடியும். இது மட்டுமல்லாமல், மழையில் நனைந்த நெல் மூட்டைகளை அரசு கொள்முதல் செய்து அதற்கான உரிய விலையை அளிக்குமா என்ற அச்சம் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். இங்கு மட்டுமல்ல, பெரும்பாலான இடங்களில் இதுபோன்ற பிரச்சனை நிலவுகிறது.

 

'பேனா' சிலைக்கெல்லாம் கோடிக்கணக்கில் பணத்தை செலவழிக்கும் தி.மு.க. அரசு, உணவு தானியங்களை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கையினை எடுக்காதது கடும் கண்டனத்திற்குரியது. மக்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டுமென்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையேயும், விவசாயிகளிடையேயும் நிலவுகிறது. எனவே, பொதுமக்களின் தேவையினைப் பூர்த்தி செய்யும் வகையில், நெல் உள்பட உணவு தானியங்களை பாதுகாப்பான முறையில் வைத்திருக்கத் தேவையான கிடங்குகளை உடனடியாகக் கட்டிட முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்