தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், மத்திய அரசு விவசாயிகள் பெற்ற கடனைத் திரும்பச் செலுத்த ஆகஸ்ட் 31 வரை கால நீட்டிப்பு செய்து வட்டித் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. ஆனால் அதற்கான அரசாணையில் வட்டிக் கணக்கிட உத்திரவிட்டு மோசடி நாடகம் ஆடுகிறது.
இதனைப் பயன்படுத்தி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் வட்டியில்லா கடனுக்கு வட்டிக் கணக்கிட்டு கெடுபிடி வசூல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
நபார்டு வங்கி 30 ஆயிரம் கோடி கூடுதல் கடன் வழங்க ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் கூட்டுறவு வங்கிகள் நிலுவைக் கடன்கள் முழுமையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லையேல் ஒத்தி வைத்துவிட்டு புதிய கடன் வழங்க தமிழக அரசு முன் வரவேண்டும்.
தஞ்சை அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை 2019-20 ஆம் ஆண்டு சாகுபடி செய்த கரும்பைப் பெற்றுக் கொண்டு அதற்கான தொகையில் விவசாயிகளுக்கு இது நாள் வரை 1 ரூபாய் கூட வழங்கவில்லை. இதனால் சென்ற ஆண்டு சாகுபடிக்குப் பெற்ற கடன் திரும்ப செலுத்த முடியாததால் புதிய கடனும் பெற முடியவில்லை. இதனால் மறு உற்பத்தி செய்வதற்கு வழியின்றி விவசாயிகள் பறிதவிக்கின்றனர். உடன் அவர்களுக்கான முழுத் தொகையையும் விடுவிக்க வேண்டும்.
2019 பாராளுமன்ற தேர்தலில் சென்னை - சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை கைவிடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் தற்போது மத்திய அரசைத் தூண்டி விட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு திட்டத்தைச் செயல்படுத்த முயற்ச்சிக்கிறாரோ எனச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்கள் கருப்பண்ணன், கடம்பூர்ராஜூ போன்றவர்கள் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பே்சுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே முதலமைச்சர் போராடும் மக்களை ஏமாற்றுவதைக் கைவிட்டு 8 வழிச்சாலை குறித்து தனது நிலையைத் தெளிவுபடுத்துவதோடு, கரோனா பாதிப்பு காலத்தில் உயிரைப் பணயம் வைத்துப் போராடும் மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து அத்திட்டத்தைக் கைவிட வேண்டுகிறேன்.
மேலும் சென்னையில் கரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும், மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகளில் பரிசோதனைகள் கைவிடப்பட்டதாலும் அனைத்துக் கிராமங்களிலும் நோய்த் தொற்று தொடங்கி உள்ளது. இதனால் விவசாய உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. எனவே அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனைக் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தி நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முன் வரவேண்டும் என்றார்.