
நாட்டில் உள்ள 30 மாநிலங்களில் 2 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. ஜம்மு காஷ்மீரில் தற்போது குடியரசுத் தலைவரின் கீழ் ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் நாட்டில் உள்ள 30 மாநில முதலமைச்சர்களில் 29 முதலமைச்சர்கள் கோடீஸ்வரர்கள் எனத் தேர்தல் விழிப்புணர்வு அமைப்பான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் அறிவித்துள்ளது.
இந்த அமைப்பு தேர்தலின் போது தற்போதைய முதலமைச்சர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதன்படி இப்பட்டியலில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி முதலிடத்தில் உள்ளார். இவரிடம் ரூ.510 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் அறிவித்துள்ளது.
இரண்டாம் இடத்தில் அருணாச்சல பிரதேசத்தின் முதலமைச்சர் பெமாகாண்டு உள்ளார். இவருக்கு ரூ.163 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சர் நவீன்பட்நாயக் ரூ.63 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இப்பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பவர் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. இவருக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகத் தேர்தல் விழிப்புணர்வு அமைப்பான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் அறிவித்துள்ளது.
இந்த பட்டியலில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 14 ஆவது இடத்தில் உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ 8.88 கோடி எனத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.