திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த தேர்தலில் 31 வார்டுகளில் திமுக கவுன்சிலர்களும், 6 இடங்களில் அதிமுக கவுன்சிலர்களும், ஓரிடத்தில் சுயேட்சை கவுன்சிலரும் வெற்றி பெற்றுள்ளார்கள். இந்த நகராட்சியின் நகர்மன்ற தலைவர் பதவி பொதுப்பட்டியல் பெண்கள் என உள்ளது. திமுக நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், தனது மனைவி நிர்மலாவை நகரமன்ற தலைவராக்க முயற்சிக்கிறார். அரசு கூடுதல் வழக்கறிஞர் சீனுவாசன் தனது மனைவி ப்ரியாவை சேர்மனாக்க வேண்டும் எனக்கேட்கிறார். நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்கிறோம் என குட்டி புகழழேந்தி, சீனுவாசன் தரப்பு சொல்கிறது.
திருவண்ணாமலை நகரத்தில் 25 ஆண்டுகாலம் திமுக நகர செயலாளராக இருந்த மறைந்த டி.என்.பாபுவை பெருமைப்படுத்துவம் விதமாக அவரது மகளும், நகர செயலாளர் மனைவி நிர்மலாவை சேர்மனாக்குங்கள் எனக்கேட்கிறார்கள். கார்த்திவேல்மாறன் மனைவியை சேர்மனாக்கினால் அவரிடமுள்ள நகர செயலாளர் பதவியை எங்களில் ஒருவருக்கு மாற்றித்தாருங்கள் எனக்கேட்கிறார்கள் முக்கிய நிர்வாகிகள் சிலர். இந்த பஞ்சாயத்து நடந்தபடியே இருக்கிறது.
சேர்மன் பதவியை விட நகரமன்ற துணைதலைவருக்கு போட்டி கடுமையாகவுள்ளது. மாணவரணி அமைப்பாளர் காலேஜ்.ரவி வசிக்கும் வார்டு பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டதால், அரசு பணியிலிருந்த தனது மனைவி அருணாவை ராஜினாமா செய்யவைத்து கவுன்சிலர் தேர்தலில் நிறுத்தி வெற்றி பெறவைத்துள்ளார். அருணா படிப்பில் டிகிரிகள் வாங்கியவர், கட்சியில் தனது சீனியாரிட்டியை முன்வைத்து தன் மனைவிக்கு துணைசேர்மன் பதவியை எதிர்பார்க்கிறார்.
இளைஞரணி பிரதிநிதித்துவத்தில் எம்.பி அண்ணாதுரை சிபாரிசில் கவுன்சிலர் ராஜாங்கம் முயற்சிக்கிறார். இரண்டாவது முறையாக கவுன்சிலராகியுள்ள ஒப்பந்ததாரர் ஜோதி வைஸ்சேர்மன் பதவி கேட்கிறார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் விஜி தனது மனைவிக்கு எதிர்பார்க்கிறார். இப்படி சேர்மன் மற்றும் வைஸ்சேர்மன் பதவிக்கு கடும்போட்டி நிலவுகிறது. இந்த பதவிகளை கைப்பற்ற அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சரின் மகனும் மாநில மருத்துவரணி துணைதலைவருமான டாக்டர் கம்பனை வலம் வந்துக்கொண்டு இருக்கிறார்கள்.
வெற்றி பெற்ற எல்லோரும்மே நகர மன்ற தலைவர், துணைதலைவர் பதவிக்கு ஆசைப்படலாம், திருவண்ணாமலை மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எ.வ.வேலு யாரை தேர்வு செய்து அறிவிப்பார் என்பதே முக்கியம். வேட்பாளர் தேர்விலேயே பொதுசேவை எண்ணம் உள்ளவர்களையே குறிப்பாக தனது தூய்மை அருணை அமைப்பில் சிறப்பாக பணியாற்றிய கட்சியினரையே பெரும்பாலும் தேர்வு செய்தார். நகரத்தை பெரியளவில் வளர்ச்சி பெறவைக்க நினைக்கும் அமைச்சரின் எண்ணத்தை செயல்படுத்த, நகர மன்ற தலைவர், துணை தலைவராக யாரை தேர்வு செய்தால் சரியாக இருக்கும் என பலவற்றை கணக்குப்போட்டே முடிவெடுப்பார் என்கிறார்கள் அமைச்சருக்கு நெருக்கமானவர்கள்.