அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் கட்சியில் மீண்டும் இணைய வேண்டும் என முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவரான ஆம்பூர் தொகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி நம்மிடம் பேசுகையில்,
நாங்கள் அனைவரும் டிடிவி தினகரன் அணியில்தான் இருக்க விரும்புகிறோம். நாங்கள் 18 பேரும் தினகரன் தலைமையில் நடந்த ஆலோசனையில் பங்கேற்றோம். நாங்கள் 18 பேரும் தெளிவாக இருக்கிறோம். நல்லது கெட்டது எது நடந்தாலும் இந்த அணியில்தான் இருப்போம். வேலூர் மாவட்டத்தை பொருத்தவரையில் நாங்கள் 3 பேரும் (பாலசுப்பிரமணியன் (ஆம்பூர்), ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்), பார்த்திபன் (சோளிங்கர்)) இந்த அணியில் நீடிப்போம்.
மேல்முறையீடு குறித்து தலைமை அறிவித்துள்ளது. கர்நாடகாவில் இதேபோல் உள்ள வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் போய்தான் நீதி கிடைத்தது. நீதிமன்றத்தை நம்புகிறோம். இதற்கிடையே 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார். நாடாளுமன்றத் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார். தேர்தலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
சசிகலாவுடனான சந்திப்பு எப்போது?
சிறை விதிகளின்படி விரைவில் நாங்கள் சந்திப்போம். ஏற்கனவே இரண்டு முறை சந்தித்து பேசியிருக்கிறேன். எந்த நிலையிலும் பக்க பலமாக இருப்பேன் என்று சொல்லியிருக்கிறார்.
முதல் முறையாக கிடைத்த எம்எல்ஏ வாய்ப்பை நீங்கள் தவறவிட்டுவிட்டதாக சொல்கிறார்களே?
எல்லாவற்றிக்கும் துணிந்துதான் தினகரன் அணியில் இருக்கிறோம். தொகுதி மக்களுக்கு பணி செய்ய முடியவில்லை. மக்கள் பிரச்சனையை கொண்டு சென்றால் அதிகாரிகள் மதிப்பதில்லை. விரைவில் தேர்தல் வரும். சந்திப்போம். வெற்றி பெறுவோம். மீண்டும் எம்எல்ஏவாக பணியாற்றுவோம் என்றார்.