Skip to main content

நான்காவது அலையை காணும் உலகம்.. விரைவில் இரட்டிப்பாகும் ஒமிக்ரான் பாதிப்பு - எச்சரிக்கும் மத்திய சுகாதாரத்துறை!

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

union health secretary

 

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதேபோல் இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. இந்நிலையில், இன்று (24.12.2021) செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷன், உலகம் நான்காவது கரோனா அலையைச் சந்தித்துவருவதாகவும், எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக ராஜேஷ் பூஷன் கூறியுள்ளதாவது, “உலகம் நான்காவது அலையைக் கண்டுவருகிறது. மேலும், நாட்டில் கரோனா உறுதியாகும் சதவீதம் 6.1% ஆகவுள்ளது. எனவே, நாம் கவனமாக இருக்க வேண்டும். பாதுகாப்பினைத் தளர்த்திக்கொள்ள முடியாது.  ஐரோப்பா, வடஅமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் வாரந்தோறும் கரோனா பாதிப்பு அதிகரிப்பைக் காணும் அதேவேளையில், ஆசியாவில் வாராவாரம் பாதிப்புகள் குறைந்துகொண்டேவருகிறது.

 

இந்தியாவின் 17 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 358 ஒமிக்ரான் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் 114 பேர் குணமடைந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை டிசம்பர் 21ஆம் தேதி, இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துதல், பெரிய கூட்டங்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும், படுக்கை எண்ணிக்கை போன்றவற்றை அதிகரிக்க வேண்டுமென்றும், கரோனா தடுப்பு நெறிமுறைகளைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் மாநிலங்களை அறிவுறுத்தியுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோர்களில் 89% பேர் முதல் டோஸைப் செலுத்திக்கொண்டுள்ளனர். தகுதியானவர்களில் 61% பேர் இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளனர். இன்று நம்மிடம் தேசியளவில் 18,10,083 தனிமைப்படுத்தப்படும் படுக்கைகள், 4,94,314 ஆக்சிஜன் படுக்கைகள், 1,39,300 ஐசியு படுக்கைகள், 24,057 குழந்தைகளுக்கான ஐசியு படுக்கைகள் மற்றும் 64,796 குழந்தைகளுக்கான சாதாரண படுக்கைகள் உள்ளன.

 

டெல்டாவை விட ஒமிக்ரான் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சித் தன்மையைக் கொண்டுள்ளது என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இதன் அர்த்தம் ஒமிக்ரான் அதிகம் பரவும் தன்மையைக் கொண்டுள்ளது என்பதாகும். ஒமிக்ரான் பாதிப்புகள் 1.5 - 3 நாட்களுக்குள் இரட்டிப்பாகும். எனவே கரோனா பாதுகாப்பு நடத்தையைப் பின்பபற்றி நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். கரோனா டெல்டாவுக்கான சிகிச்சை நெறிமுறைகள் ஒமிக்ரானுக்கும் பொருந்தும். கரோனா முதல் அலையைவிட 2வது அலையில் ஆக்சிஜன் தேவை 10 மடங்கு அதிகரித்தது. இதனால், நாளொன்றுக்கு 18,800 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய சராசரியைவிட குறைவாக தடுப்பூசி செலுத்திக்கொண்டு 11 மாநிலங்கள் கவலைக்குரியவையாக இருக்கிறது.” இவ்வாறு ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்