ஒடிசா மாநிலம், பெர்ஹாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சிபாராம் பாலோ (54). இவரது மனைவி புஜ்ஜி (52). இந்த தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில், கடந்த 1 ஆம் தேதி வீட்டில் நடந்த சிறிய தீ விபத்தில் சிக்கிய புஜ்ஜி படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து, புஜ்ஜியை சிகிச்சைக்காக அங்கு இருக்கக்கூடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே, அவர்களுக்கு போதிய பணம் வசதி இல்லாத காரணத்தினால் சிகிச்சையை பாதியிலேயே விட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பினர். இருப்பினும், வீட்டில் இருந்தபடியே புஜ்ஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (12-02-24) இரவு தூங்கிய புஜ்ஜி, அடுத்த நாள் காலை ஆன போதும் எழுந்திருக்கவில்லை. இதனால், கணவர் சிபாராம் பாலோவும், அவர்களது உறவினர்களும் புஜ்ஜி இறந்துவிட்டதாக கருதினர். மேலும் அவர்கள் மருத்துவர்களிடம் இறப்பை உறுதி செய்யாமல் இறுதிச் சடங்கிற்காக ஏற்பாடு செய்தனர். இதனையடுத்து, அன்று மாலை சுடுகாட்டுக்கு புஜ்ஜியை எடுத்துச் சென்று அங்கு அவருக்கு தீ வைக்க முயன்றனர். அந்த நேரத்தில் புஜ்ஜி, திடீரென்று கண் திறந்து எழுந்தார். இதனால், அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போதுதான், புஜ்ஜி இறக்கவில்லை என்பது அவர்களுக்குத் தெரியவந்தது.
இதனையடுத்து, புஜ்ஜியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். இறுதிச் சடங்கின் போது உயிருடன் பெண் எழுந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.