
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சலாவுதீன். இவருக்கும் உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது. அதன்பிறகு சலாவுதீன் தனது மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு தொடர்ந்து அடித்துத் தாக்கி சித்திரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சலாவுதீன் வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தி வந்ததால், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த இளம் பெண் தனது கோபித்துக்கொண்டு கடந்த 26 ஆம் தேதி தனது தாயாரின் வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தனது கணவர் மீது அருகே உள்ள காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டர் இளம் பெண் கொடுத்த புகாரை வாங்க மறுத்துள்ளார். இதனால் செய்வதறியாமல் இளம்பெண் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்த நிலையில் தாய் வீட்டில் இருந்து வந்த இளம் பெண்ணுக்கு போனில் தொடர்பு கொண்ட சலாவுதீன், சண்டையிட்டு வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் செல்போனிலேயே முத்தலாக் சொல்லிய சலாவுதீன் தான் உன்னை விவகாரத்து செய்வதாக கூறியிருக்கிறாராம்.
இந்த நிலையில் மன வேதனையடைந்த இளம் பெண் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதனிடையே, வரதட்சணை புகார் கொடுக்க வந்தபோது உதவி காவல் ஆய்வாளர் புகாரை வாங்க மறுத்துவிட்டார் என்றும், அதன் காரணமாகவே எனது மகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார் என்று உயிரிழந்த இளம்பெண்ணின் தாயார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட எஸ்.பி. சலாவுதீன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்தும்படி அறிவுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.