
இந்திய ரயில்வேயில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்து பயணிக்கும் முறை தொடர்பாக பல்வேறு புதிய விதிகள் இன்று (01.05.2025) முதல் புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி வெயிட்டிங் லிஸ்ட் எனப்படும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணச் சீட்டு வைத்திருப்போர் 2ஆம் மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் கட்டாயம் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்து இருக்கைகள் மற்றும் படுக்கைகள் உறுதியாகாத பயணச் சீட்டுகளை வைத்திருப்போர் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணித்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்க பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் காத்திருப்போர் பட்டியல் டிக்கெட் வைத்திருப்போர் முன்பதிவு இல்லாத 2ஆம் வகுப்பு பெட்டியில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவு செய்து பயணிப்பவர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களைக் கவனத்தில் கொண்டு இத்தகைய அதிரடி திட்டத்தை ரயில்வே கொண்டு வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு அந்த டிக்கெட்டுகள் காத்திருப்போர் பட்டியலில் இருந்தால் தானாகவே ரத்து செய்யப்பட்டு பயணிகளுக்குப் பணம் திரும்ப வழங்கப்பட்டு வரும் நடைமுறை வழக்கம் போல் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும் எண்ணிக்கைக்கும் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி ஒரு மாதத்திற்குக், கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம்களில் இருந்து 5 முறையும், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.களில் இருந்து 3 முறையும் பணம் எடுத்து கொள்ளலாம். மெட்ரோ நகரங்கள் அல்லாத நகரங்களில் மாதத்திற்கு 5 முறை மற்ற ஏ.டி.எம்.களில் பணம் எடுத்துக் கொள்ளலாம். இந்த எண்ணிக்கையை விடக் கூடுதலாகப் பணம் எடுத்தால் கூடுதலாக ரூ.21 பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. இதனை ரூ. அதிகரித்து ரூ. 23 பிடித்தம் ரிசர்வ் வங்கி இன்று முதல் அனுமதி வழங்கியுள்ளது. ஏடிஎம்களில் பணம் எடுப்பது தவிர்த்து வங்கியில் பணம் இருப்பு எவ்வளவு உள்ளது எனப் பார்ப்பதையும் ஒரு பரிவர்த்தனையாகவே வங்கிகள் கணக்கில் கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஒரு சில வங்கிகள் இது போன்ற பணம் எடுக்காத பரிவர்த்தனைகளை பயன்படுத்துவதற்கு இலவசம் என்றும் அறிவித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.