
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே அமைக்கப்பட்ட விழிஞ்சம் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுக திறப்பு விழா இன்று (02.05.2025) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி விழிஞ்சம் துறைமுகத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்வில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சசி தரூர், கேரள பா.ஜ.க. தலைவர் ராஜீவ் சந்திரசேகர், அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில், “சில நாட்களுக்கு முன்பு நாம் அனைவரும் மிகவும் சோகமான நேரத்தை அனுபவித்தோம். போப் பிரான்சிஸை இழந்தோம். இந்தியாவின் சார்பாக, ஜனாதிபதி திரௌபதி முர்மு அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். கேரள மண்ணிலிருந்து, மீண்டும் ஒருமுறை எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜி20 உச்சி மாநாட்டின் போது, இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா வழித்தடம் தொடர்பாகப் பல பெரிய நாடுகளுடன் ஒப்பந்தங்களைச் செய்திருந்தோம். இந்தப் பாதையில் கேரளா மிக முக்கியமான நிலையில் உள்ளது. இதனால் கேரளா பெருமளவில் பயனடையப் போகிறது. நமது நாட்டின் கடல்சார் துறையை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்வதில் தனியார்த் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
முதல்வரிடம் (பினராயி விஜயன்) நான் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் இந்தியா கூட்டணியின் வலுவான தூண். சசி தரூரும் இங்கே அமர்ந்திருக்கிறார். இன்றைய நிகழ்வு பலரின் தூக்கத்தைக் கெடுக்கப் போகிறது. மத்திய அரசு மாநில அரசினுடைய ஒத்துழைப்புடன் சாகர் மாலா திட்டத்தின் மூலம் துறைமுகங்களுடைய உட்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது. அதன் காரணமாகத் துறைமுகத்தினுடைய இணைப்பும் அதிகரித்துள்ளது. மிக முக்கியமாகக் கடல்வழி சார்ந்த பொருளாதாரத்தினுடைய வளர்ச்சியாக இருக்கும். அதானி என்ற ஒரு காரணத்திற்காகவே இந்த துறைமுகத்திற்குக் கம்யூனிஸ்ட் அமைச்சர்கள் பலரும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள். கேரளாவை ஒரு வளர்ந்த இடத்திற்குக் கொண்டு வர வேண்டும். ஜெய் பாரதம் ஜெய் கேரளம்” எனப் பேசினார்.