பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரசும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இருப்பினும், ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. அதேநேரத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தோல்வியைத் தழுவியதற்கு காங்கிரசுக்கு அதிக இடங்கள் அளிக்கப்பட்டதே காரணம் என விமர்சனங்கள் எழுந்தன.
இந்தநிலையில், பீகாரின் குசேஷ்வர் அஸ்தான் மற்றும் தாராபூர் ஆகிய இரண்டு தொகுதிகளின் எம்.எல்.ஏக்கள் உயிரிழந்ததால், அத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் குசேஷ்வர் அஸ்தான் தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டிருந்த காங்கிரஸ் வேட்பாளர் 7,200 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இருப்பினும் இந்த இடைத்தேர்தலில் குசேஷ்வர் அஸ்தான் தொகுதி தங்களுக்குத் தரப்பட வேண்டும் என காங்கிரஸ் விரும்பியது. ஆனால் ராஷ்ட்ரிய ஜனதா தளம், தங்கள் கட்சியைச் சேர்ந்தவரை வேட்பாளராக களமிறக்கியது. இதனால் காங்கிரஸ் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணியை முறித்துக்கொண்டதுடன், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்தது.
இந்தநிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்திடம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், (இடைத்தேர்தலில்) ஒரு சீட்டை விட்டுக்கொடுத்திருந்தால் இரு கட்சிகளுக்குமிடையேயான கூட்டணி தொடர்ந்திருக்கும் என்பது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த லாலு பிரசாத் யாதவ், "காங்கிரசுக்கு எதற்கு சீட் கொடுக்க வேண்டும். அவர்கள் தோற்பதற்காகவா? அவர்கள் டெபாசிட்டை இழப்பதற்காகவா?" என கடுமையாக விமர்சித்துள்ளார். லாலு பிரசாத்தின் இந்த விமர்சனம் காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளிடையே விரிசலை அதிகரிக்கும் என கருதப்படுகிறது.