பல இடங்களில் திருட வரும் நபர்கள் வீட்டில், கடைகளில் இருக்கும் பணத்தை திருடிவிட்டுச் செல்வதோடு, சாப்பாடு உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் இருந்து சாப்பிட்டு சாவகாசமாக திருடிச் செல்லும் சம்பவங்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ராஜஸ்தானில் சற்று வித்தியாசமாக ஒரு கடையில் திருடிவிட்டு கடையின் உரிமையாளருக்கு பாசமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
ராஜஸ்தான் ஜெய்சல்மேர் மாவட்டத்தின் பானியான பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார் கோமாராம். கடந்த 23 ஆம் தேதி இரவு கடையைப் பூட்டி விட்டு அதே பகுதியில் இருக்கும் தனது வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அடுத்தநாள் வழக்கம்போல் தனது கடையைத் திறந்த கோமாராம் கடையில், இனிப்புகள் மற்றும் பொருட்கள் சிதறிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். கடைகளில் திருடப்பட்டதை உணர்ந்த கோமாராம், உடனே கல்லாப்பெட்டிக்கு சென்று பார்த்தபோது, அதில் வைக்கப்பட்ட பணம் திருடப்பட்டிருந்தது. மேலும் அதில் இரண்டு பக்கத்திற்கு கடிதம் ஒன்று இருந்துள்ளது.
அந்தக் கடிதத்தில், “ஹலோ சார், நான் நல்ல உள்ளம் உள்ளவன். நான் உங்கள் கடைக்குள் திருடுவதற்காக வரவில்லை. என் ஆசையை நிறைவேற்றுவதற்காகவே நுழைந்தேன். உங்கள் கடையின் மேலிருந்து மூன்று செங்கற்களை அகற்றிவிட்டு உள்ளே நுழைந்தேன். நான் நேற்றிலிருந்து சாப்பிடவில்லை. கடுமையான பசி. நான் உங்கள் கடைக்கு பணம் எடுக்க வரவில்லை. பசியை போக்க வந்தேன். நீங்கள் ஏழை என்று எனக்குத் தெரியும். அதனால்தான் உங்களுக்கு ஆறுதல் சொல்ல இந்த கடிதத்தை எழுதுகிறேன். ஆனால் திருடும்போது எனது காலில் காயம் ஏற்பட்டது எனவே இதற்கும் பணம் செலுத்த வேண்டும். உங்களின் கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டேன். இரண்டு வெள்ளை இனிப்புகள் மற்றும் இரண்டு துண்டு அக்ரா பேத்தா தவிர வேறு எதுவும் உங்கள் கடையில் சாப்பிடவில்லை. நான் கடைசியாகச் சொல்ல விரும்புவது ஒன்று., காவல்துறையை அழைக்க வேண்டாம். அவர்களால் என்னை பிடிப்பதற்கு பதிலாக அவர்கள் உங்களிடமிருந்து பணம் பறிப்பார்கள். உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இது குறித்து விசாரிக்க கடையின் உரிமையாளர் கோமாராம் திருடு குறித்து புகார் அளிக்க மறுத்துள்ளார். பாசக்கார திருடனின் செயலும், அதற்கு மதிப்பளித்த கடை உரிமையாளரின் செயலும் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.