மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கொடியேரி பாலகிருஷ்ணன் (வயது 68) புற்றுநோய் காரணமாக, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவுக்கு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், கேரள மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.
கொடியேரி பாலகிருஷ்ணன் குறித்து விரிவாக பார்ப்போம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கொடியேரி பாலகிருஷ்ணன். இவர் கேரள மாநிலம், மலபார் மாவட்டத்தில் உள்ள கொடியேரியில் 1953- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16- ஆம் தேதி பிறந்தார். கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் பதவியை வகித்தார். அதைத் தொடர்ந்து, கட்சி செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்ட கொடியேரி பாலகிருஷ்ணனை, கட்சியின் கேரள மாநிலச் செயலாளராகவும் நியமித்தது கட்சித் தலைமை.
சுமார் மூன்று முறை கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராகப் பதவி வகித்து வந்துள்ளார். அத்துடன், கேரள மாநில சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அப்போதைய முதலமைச்சர் வி.அச்சுதானந்தன் தலைமையிலான அமைச்சரவையில் கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரை கேரள மாநில உள்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். 1975- ஆம் ஆண்டு அவசர நிலையின் போது மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.