அலகாபாத் நகரின் பெயரை பிரயாக்ராஜ் என்று மாற்றும் திட்டத்திற்கு கடந்த வாரம் நடைபெற்ற உத்திரப்பிரதேச மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சிம்லாவின் பெயரையும் சியாமளா என்று மாற்றப்போவதாக தகவல்கள் வெளிவர துவங்கியுள்ளது. இந்த நிலையில் பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை அமைச்சரான கிரிராஜ் சிங் “நாம் முகலாயரிடமோ அல்லது பிரிட்டீஷாரிடமோ அடிமையாக இல்லை, நாம் இன்று இருப்பது சுதந்திர நாடு, இதில் ஏன் இன்னும் அவர்களின் அடையாளத்துடன் இருக்க வேண்டும். அலகாபாத்தின் முன்னாள் பெயர் பிரயாக்ராஜ், இது 16-ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் அக்பரால் மாற்றப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் முகலாயர் காலத்தில் சூட்டப்பட்ட பெயர்களை மாற்றி மீண்டும் பழைய பெயரைச் சூட்ட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அடி எடுத்து வைத்திருப்பது நல்ல நடவடிக்கை” என்று கூறியுள்ளார். மேலும் பீகார் உட்பட நாடு முழுவதும் முகலாயர்களுடன் தொடர்புள்ள பெயர்கள் அனைத்தையும் மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.