பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி காணொளி வாயிலாக இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, விவசாயிகளுக்கான நிதியை விடுவித்தார். மேலும் இந்த நிகழ்வில் உரையாற்றிய மோடி, கரோனா பாதிப்பு குறித்தும், தடுப்பூசிகள் குறித்தும் பேசினார்.
பிரதமர் ஆற்றிய உரை வருமாறு;
இந்த கொரோனா வைரஸ் காரணமாக, நமக்கு நெருக்கமானவர்களை நாம் இழந்துவிட்டோம். குடிமக்கள் அனுபவித்த அதே வலியை உணர்கிறேன். உங்கள் தலைமை சேவகன் என்ற முறையில், உங்களின் ஒவ்வொரு உணர்வையும் பகிர்ந்துகொள்கிறேன். தேசம், கண்ணுக்கு தெரியாத மற்றும் உருமாற்றம் செய்துகொள்ளும் எதிரியை கையாண்டு வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் மிக மோசமானதான இந்த தொற்றுநோய், உலகை ஒவ்வொரு அடியிலும் சோதித்து வருகிறது. நமக்கு முன் ஒரு கண்ணுக்கு தெரியாத ஒரு எதிரி உள்ளது. நமது வளங்களில் உள்ள தடைகள் போர்க்கால அடிப்படையில் அகற்றப்படுகின்றன.
இதுவரை சுமார் 18 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகள், இலவசமாக தடுப்பூசியை செலுத்துகின்றன. எனவே உங்கள் முறை வரும்போது தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள். தடுப்பூசி கொரோனா வைரஸுக்கு எதிரான நமது கேடயமாக இருக்கும். மேலும் கடுமையான தொற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்கும். தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் முகமூடிகள் மற்றும் சமூக விலகல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நம்மால் கைவிட்டுவிட முடியாது. கொரோனாவுக்கு எதிரான இந்த போரில் நாம் போராடி வெல்வோம்.
அதிகரித்து வரும் கரோனா அச்சுறுத்தல் தொடர்பாக கிராமங்களில் வாழும் மக்களை எச்சரிக்க விரும்புகிறேன். நமது கிராமங்களிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கிராமங்களில் மக்களுக்கு கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கிராம பஞ்சாயத்துகளுக்கு முக்கிய பங்கு உண்டு.
இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.