Skip to main content

சிகரெட் கேட்டதால் ஏற்பட்ட வாக்குவாதம்; பொறியாளர் மீது காரை ஏற்றி கொலை!

Published on 17/05/2025 | Edited on 17/05/2025

 

Engineer thrash by driving a car over him An argument over a cigarette in bangalore

சிகரெட் வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மென்பொருள் பொறியாளர் ஒருவர்மீது காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சஞ்சய் (29). இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்துள்ளார். இவரும், இவரது நண்பர் சேத்தன் என்பவரும், கடந்த 10ஆம் தேதி ஒர்க் ஃபிரம் ஹோமில் வேலை பார்த்துவிட்டு அதிகாலை 4 மணியளவில் சாலையோரக் கடையில் தேநீர் குடிக்கச் சென்றுள்ளனர். 

அவர்கள் அங்கே நின்று கொண்டிருந்தபோது, ​​ஒரு நபர் தனது மனைவியுடன் ஹூண்டாய் காரில் வந்து, சஞ்சய் மற்றும் சேத்தனிடம் சிகரெட் கேட்டுள்ளார். அப்போது அவர்கள், சிகரெட் கொடுக்க மறுத்து, ‘சொந்தமாக சிகரெட் வாங்குங்கள்’ எனக் கூறியுள்ளனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை, அருகில் இருந்தவர்கள் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினர். 

இதனையடுத்து, சஞ்சய் மற்றும் சேத்தன் ஆகிய இரண்டு பேர் தங்களுடைய மோட்டார் சைக்கிளை எடுத்து அங்கிருந்துச் சென்றனர். ஆனால் அந்த நபர், தனது காரில் அவர்களைப் பின் தொடர்ந்து வந்துள்ளார். கொனனகுண்டே கிராஸ் அருகே யு-டர்ன் செய்ய முயன்றபோது, அவர்களின் பைக் மீது அந்த நபர் மோதினார் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் பைக், அருகிலுள்ள கடையின் ஷட்டரில் மோதியது. இதில் சஞ்சய் சம்பவ இடத்திலேயே சுயநினைவை இழந்தார். இதனையடுத்து, சஞ்சய் மற்றும் சேத்தன் ஆகியோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர். கடும் காயங்களோடு இரண்டு நாட்களாக தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த சஞ்சய், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சேத்தன் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். 

பைக் மீது காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் தொடர்பான காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ ஆதாரத்தையும் நேரடி சாட்சியங்களையும் வைத்து, அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கொலை செய்த நபர் 31 வயதான பிரதீக் என்பதும், அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. 

சார்ந்த செய்திகள்