இந்திய அரசியலமைப்பு, சனாதன தர்மத்தை உள்ளடக்கியது என்று குடியரசுத் துணை தலைவரும், மக்களவை சபாநாயகருமான ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியில் ‘இந்து ஆன்மீகம் மற்றும் சேவை கண்காட்சி’ என்ற விழா நடைபெற்றது. இந்த விழாவில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “சனாதன தர்மம் ஒருபோதும் விஷத்தைப் பரப்பாது. நாட்டின் அரசியலை மாற்றக்கூடிய மிகவும் ஆபத்தான மற்றொரு அறிகுறி உள்ளது. இது கொள்கை மூலமாகவும், நிறுவன ரீதியாகவும், திட்டமிட்ட சதியிலும் நடக்கிறது. அதுவே மத மாற்றம். அவர்கள் சமூகத்தின் பலவீனமாக பிரிவினரை குறிவைத்து மத மாற்றம் செய்கின்றனர். அவர்கள் நமது பழங்குடி சமூகங்களுக்குள் அதிகமாக ஊடுருவுகிறார்கள்.
ஒரு கொள்கையாக கட்டமைக்கப்பட்ட முறையில் மத மாற்றங்களை நாம் மிகவும் வேதனையுடன் பார்க்கிறோம். இது நமது அரசியலமைப்பு கோட்பாடுகளுக்கு எதிரானது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அத்தகைய தீய சக்திகளை நடுநிலையாக்க வேண்டிய அவசரத் தேவை நம்மிடம் உள்ளது. நான் விழிப்புடன் இருந்து விரைந்து செயல்பட வேண்டும். இந்தியாவை துண்டாடுவதில் தற்போது செயல்படுபவர்களின் அளவை உங்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.
நமது அரசியலமைப்பு சட்டத்தில் சனாதன தர்மம் அழகாக பொதிந்துள்ளன. அரசியலமைப்பு சட்டம், சனாதன தர்மத்தின் கருத்துகளில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. சனாதன தர்மத்தின் சாராம்சம், இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் பிரதிபலிக்கிறது” என்று பேசினார்.