மின்சாரம் திருடிய குற்றத்திற்காக கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு 68 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது கர்நாடகா அரசு.
கடந்த தீபாவளி தினத்தன்று பெங்களூரில் உள்ள கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் வீட்டில் மின் விளக்கு அலங்காரத்திற்கு மின்சாரம் திருடியதாகப் புகார்கள் எழுந்தன. வீட்டை வண்ண விளக்குகளால் அலங்கரிக்க, மின்சாரம் திருடப்பட்டதாக காங்கிரஸ் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியதோடு, போஸ்டர்கள் ஒட்டி இருந்தது. இந்த விவகாரத்தை திசை திருப்பவே கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா பேசும் வீடியோ காட்சிகளை சம்பந்தமின்றி பரப்பி வருவதாக குமாரசாமி மீது கர்நாடகா காங்கிரசினர் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் 71 யூனிட் மின்சாரம் திருடப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது குமாரசாமிக்கு 68,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது பெங்களூர் மின்சார வாரியம்.