தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு டன் கணக்கில் கஞ்சா போன்ற பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து கஞ்சா கும்பலை பிடித்தாலும் கூட கஞ்சா கடத்தலும் கஞ்சா விற்பனையும் குறையவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தான் மல்லிபட்டினம் அரசுப் பள்ளியில் கத்தியில் குத்திக் கொல்லப்பட்ட ஆசிரியை ரமணி வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறிய பாஜக கருப்பு முருகானந்தம் பேராவூரணி பகுதியில் கஞ்சா அதிகமாக உள்ளது என்று குற்றம்சாட்டிச் சென்றார்.
இந்தநிலையில் பேராவூரணி பகுதிக்கு வெளியூர்களில் இருந்து லாரியில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்தி வரப்படும் தகவல் அறிந்து தனிப்படை போலிசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதில் பேராவூரணி அருகில் உள்ள முடச்சிக்காடு கலைஞர் நகர் பகுதியில் கண்டெய்னர் போன்ற பெரிய பொருட்களை ஏற்றிச் செல்லும் நீளமான லாரி எந்த சுமையும் இல்லாமல் நிற்பதாகத் தனிப்படை போலிசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் லாரியை சோதனை செய்த போது லாரியில் ரகசிய அறை அமைத்து பண்டல் பண்டலாக கஞ்சா இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சுமார் 300 கிலோ கஞ்சா பண்டல்களை கைப்பற்றிய போலிசார் கடத்தலில் ஈடுபட்ட காரங்குடா கிராமத்தைச் சேர்ந்த சின்னமுத்து மகன் அண்ணாதுரை(44), ஆலங்குளம் முத்தையா மகன் தர்மராஜ் (34), அம்மணிச்சத்திரம் கருப்பையா முத்தையா (60) ஆகியோரை கைது செய்த போலீசார் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரி, மற்றும் பா.ஜ.க கொடி கட்டிய கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். பாஜக பிரமுகர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.