கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். அதே பள்ளியில், மாணவர் போலீஸ் கேடட் பயிற்றுவிப்பாளராக போலீஸ் அதிகாரி ஒருவர் வேலை பார்த்து வந்தார். போலீஸ் அதிகாரி, அந்த சிறுமியிடம் தொலைப்பேசி மூலம் பேசி நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
இதற்கிடையில், கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதியன்று, கொடுங்கல்லூர் அருகே உள்ள ஒரு வீட்டில் பிறந்தநாள் உபசரிப்பு விழா நடைபெறவுள்ளதாக அந்த சிறுமியை அந்த வீட்டிற்கு போலீஸ் அதிகாரி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றவுடன் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இச்சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில், போலீஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்து கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தனர். அன்றிலிருந்து அவர் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கேரள நீதிமன்றத்தில் போலீஸ் அதிகாரி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.பாபு, ‘அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரின் அடிப்படை உரிமையை நீதிமன்றம் புறக்கணிக்க முடியாது என்றாலும், செய்த குற்றத்தின் கொடூரமான தன்மையை அறிந்தும் முற்றிலும் கண்களை மூடிக்கொள்ள முடியாது’ என்று காட்டமாக கூறி போலீஸ் அதிகாரியின் ஜாமீன் மனுவை நிராகரித்தார்.