ஒரு வாரத்திற்கும் மேலாக ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கி நடத்தி வருகிறது. தொடர் போர் சூழல் காரணமாக அங்கு பதற்றம் நிலவி வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ், கார்கீவ், மரியுபோல் மற்றும் சுமி ஆகிய நகரங்களில் தற்காலிகமாக போர் நிறுத்தப்பட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையிலும், பொதுமக்களை பத்திரமாக வெளியேற்ற வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த போர்நிறுத்த முடிவை எடுத்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த 5 ஆம் தேதி மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் வோல்னோவாகா, மரியுபோல் ஆகிய இரண்டு நகரங்களில் தற்காலிக போர் நிறுத்த முடிவை ரஷ்யா எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியிடம் இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். சுமார் 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த உரையாடலில், உக்ரைனில் நிலவிவரும் போர் சூழல், தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்ததோடு இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றியதற்கு நன்றியும் தெரிவித்தார். மேலும் சுமி நகரத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்கத் தொடர்ந்து உக்ரைன் உதவ வேண்டும் என்ற கோரிக்கையையும் பிரதமர் மோடி வைத்துள்ளார்.