உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணிபுரிவதாகத் தரவுகளைத் தயார் செய்து ஒரே ஆண்டில் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்தது கண்டறியப்பட்டுள்ளது.
மாநில அடிப்படை கல்வித் துறையின் கீழ் உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் உள்ள கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்தியாலயாவில் (கேஜிபிவி) பணியாற்றிய அனாமிகா என்ற அந்த ஆசிரியை, மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பணியாற்றியதாகப் போலி தரவுகள் ஏற்பாடுகள் செய்து சம்பளம் பெற்று வந்தது கண்டறியப்பட்டுள்ளது.
மாநில கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் தரவுகள் அடங்கிய தளம் ஒன்று அண்மையில் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது. அந்தத் தளத்தில் ஆசிரியர்கள் பள்ளிகளில் எப்போது இணைந்தார், ஆசிரியர்களின் பணி உயர்வு, ஊதியம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும். இந்தத் தளத்தில் சந்தேகிக்கத்தக்க வகையில் ஆத்மிகாவின் பெயர் 25 பள்ளிகளிலிருந்துள்ளது. அதன்பின்னர் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், கடந்த ஒரு ஆண்டாக அமேதி, அம்பேத்கர் நகர், ரெய்பரேலி, பிரயாகராஜ், அலிகர் எனப் பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் அவரது பெயர் ஆசிரியர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பதும், அதற்காக அவர் அனைத்துப் பள்ளிகளிலும் மாதம்தோறும் சம்பளம் வாங்கி வந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டபோது, அந்த ஆசிரியை தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து அவரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேலும், கே.ஜி.பி.வி. பள்ளியில் சம்பளத்திற்காக அவர் கொடுத்திருந்த வங்கிக் கணக்குதான் மற்ற பள்ளிகளிலும் கொடுக்கப்பட்டுள்ளதா என அதிகாரிகள் கண்டறிந்து வருகின்றனர். இந்த ஆண்டு பிப்ரவரி வரை 13 மாதங்களில் பள்ளிக்கல்வித்துறையை ஏமாற்றி சுமார் 1 கோடி ரூபாய் சம்பளத்தை அவர் பெற்றுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.