Skip to main content

கடத்திச் செல்லப்பட்ட குழந்தைகள் சடலமாக மீட்பு; அடுத்தடுத்து நிகழும் துயர சம்பவம்!

Published on 16/11/2024 | Edited on 16/11/2024
Rescue of Kidnapped Children in manipur

மணிப்பூரில் உள்ள ஜிரிபாம் பகுதியில் சி.ஆர்.பி.எஃப். பாதுகாப்பு படையினருக்கும், குக்கியினத்தைச் சேர்ந்த ஆயுதக்குழுவினருக்கும் இடையே கடந்த 11ஆம் தேதி மோதல் சம்பவம் நடைபெற்றது. ஆயுதக் குழுவினர் இரு திசைகளில் இருந்து காவல் நிலையத்தில் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியபோது இந்த மோதம் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த என்கவுண்டரில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் எனத் தகவல்கள் வெளியானது. 

குக்கி ஆயுத குழுவினருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து, நிவாரண முகாமில் இருந்த மெய்தி சமூகத்தைச் சேர்ந்த 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாக தகவல் வெளியானது . ஜிரிபாம் மாவட்டத்தில் நடந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து, 13 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியானதை அடுத்து, 5 பேரை உயிரோடும், 2 ஆண்களின் உடல்கள் எரிக்கப்பட்ட நிலையிலும் போலீசார் கண்டுபிடித்தனர். மீதமுள்ள மெய்தி இனத்தை சேர்ந்த 60, 31, 25 ஆகிய வயதுடைய பெண்கள், 3 குழந்தைகள் என மொத்தம் 6 பேரை பிடிக்க, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி வந்தனர். 

இந்த நிலையில், காணாமல் போன 6 பேரில், மூன்று பேர் மணிப்பூர்-அசாம் எல்லைக்கு அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், ஜிரிமுக் என்ற கிராமத்தில் ஒரு ஆற்றின் அருகே ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதல், ஆளும் பா.ஜ.க அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடித்தது. இதனால் மணிப்பூர் மாநிலமே கலவர பூமியாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்