2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் இனி உள்ளாட்சி தேர்தல்களில் எந்த விதமான பதவிகளுக்கும் போட்டியிட முடியாது என சட்டசபையில் மசோதா நிறைவேற்றியுள்ளது உத்தராகண்ட் மாநில ஆளும் அரசான பாஜக அரசு.
நேற்று நடைபெற்ற உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை கூட்டத்தில் இதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதை தடை விதித்தும், கிராமப்புற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியும் கட்டாயபடுத்தப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்க்கட்சியில் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இது நிறைவேற்றப்பட்டது. இதன்படி உள்ளாட்சி தேர்தல் வேட்பாளராக போட்டியிடுபவர் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.