பா.ஜ.க தலைமையிலான ஒன்றிய அரசின் ஜவுளித்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் கிரிராஜ் சிங். இவர், அவ்வபோது இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தனக்கு இஸ்லாமியர்கள் யாரும் வாக்களிக்கவில்லை, அதனால் அவர்களுக்கு பணியாற்றப் போவதில்லை என்று கூறியிருந்தார். அதே போல், சமீபத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ‘இஸ்லாமியர்களை இங்கு வாழ வைத்தது தவறு என்றும், இஸ்லாமியர்களை ஏன் இங்கு இருக்க அனுமதித்தார்கள்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்த நிலையில், வீடுகளில் ஈட்டி, வாள், ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும் என்று மீண்டும் சர்ச்சையாக பேசியுள்ளார்.
இந்து ஸ்வாபிமான் யாத்திரையின் ஒரு பகுதியாக பீகார் மாநிலம், கிஷன்கஞ்சில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “இந்துக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். இதை எதிர்கொள்ள அவர்கள் ஒன்றுபட வேண்டும். கிஷன்கஞ்சிற்கு வருவதற்கு முன்பு, நான் அராரியா, கதிஹார் மற்றும் பூர்னியா ஆகிய மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். எல்லா இடங்களிலும் மக்கள் தங்கள் சகோதரிகள் மற்றும் மகள்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இந்து பெண்கள் லவ் ஜிஹாத் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறுகிறார்கள். அவர்களின் வலையில் விழத் தயாராக இல்லாத பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் குற்றவாளிகள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படுவதில்லை. இந்துக்கள் முஸ்லிம்களை விட அதிகமாக இருக்கும் இடங்களில், அவர்களின் கோவில்கள் அழிக்கப்படுவதாகவும், அவர்களின் மத பழக்க வழக்கங்களுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் நான் அறிந்தேன். கிறிஸ்தவ மிஷனரிகள் இந்த பகுதியில் செயல்படுகின்றனர். ஆனால், இந்துக்களை மட்டுமே குறிவைக்கின்றனர்.
இந்துக்கள் ஒன்றுபட வேண்டும். ஏறக்குறைய ஒவ்வொரு இந்து கடவுளும் தெய்வமும் திரிசூலம், வாள் அல்லது ஈட்டியை ஏந்தியிருக்கிறது. இது புனிதம் மற்றும் வலிமையை குறிக்கிறது. எனவே, திரிசூலம், வாள், ஈட்டி உள்ளிட்ட பொருட்களை உங்கள் வீட்டில் வைத்திருக்குமாறு நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இவைகளை பூஜை செய்த பின் வழிபட வேண்டும். தேவை ஏற்படும் போது தற்காப்புக்காக பயன்படுத்துங்கள்” என்று பேசினார்.