சிவசேனா கட்சியின் தலைவரும், மகாராஷ்ட்ர மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே போட்டியின்றி சட்டமேலவை உறுப்பினராக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாத உத்தவ் தாக்கரே, நேரடியாக மகாராஷ்ட்ரா முதல்வர் ஆனதால், அடுத்த ஆறு மாதத்திற்குள் சட்டசபை உறுப்பினர் அல்லது மேலவை உறுப்பினர் ஆகவேண்டும் என்ற கட்டாயம் அவருக்கு உருவானது. அம்மாநிலத்தில் இரண்டு சட்டசபை தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், அதற்கான தேர்தலில் உத்தவ் தாக்கரே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கரோனா பரவல் காரணமாக அந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில்,இந்த மாதத்திற்குள் சட்டசபை உறுப்பினர் அல்லது மேலவை உறுப்பினர் ஆகவேண்டும் என்ற கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து நீண்ட இழுபறிக்குப் பின்னர் அண்மையில் தேர்தல் ஆணையம் சட்டமேலவை தேர்தலை நடத்த அனுமதியளித்தது. இதனைத் தொடர்ந்து காலியாக உள்ள ஒன்பது சட்டமேலவை இடங்களுக்கு உத்தவ் தாக்கரே உட்பட ஒன்பது பேர் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்களைத் திரும்பப்பெறுவதற்கான அவகாசம் நேற்று மாலை 3 மணியுடன் முடிந்தது. 9 இடங்களுக்கு 9 பேர் மட்டுமே மனுத் தாக்கல் செய்திருந்ததால், நேற்றே தேர்தல் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்படி உத்தவ் தாக்கரே சட்டமேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.