16 ஆவது ஐபிஎல் தொடரின் 70 ஆவது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் குஜராத் அணியும் மோதின. இதில் பெங்களூரு அணி வென்றால் அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் சூழலில் களமிறங்கியது. ஆனால் ஆட்டத்தின் முடிவில் குஜராத் வென்றது. அப்போட்டியில் விராட் அடித்த சதம் வீணானது. மாறாக குஜராத் அணியில் இளம் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் நிலையாக ஆடி சதமடித்து அணிக்கு வெற்றியும் தேடித் தந்தார்.
தொடர்ந்து சுப்மன் கில்லின் சகோதரி ஷஹீனீல் கில் குறித்து பெங்களூரு அணியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரால் செய்யத் தொடங்கினர். இதில் விராட் கோலியின் ரசிகர்களும் இருந்தனர். டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகக் கூறினார். ட்வீட்களின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்துள்ள அவர், கில்லின் சகோதரியை அவமரியாதை செய்பவர்களை ஒரு போதும் விட்டுவைக்க முடியாது என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
முன்னதாக, விராட் கோலியின் மகளை அவமரியாதை செய்தார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தோம். அதேபோல் இப்போது கில்லின் சகோதரியை அவமரியாதை செய்தவர்கள் மீதும் டெல்லி மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லின் சகோதரியை குறி வைத்து பேசிய சில சமூக ஊடகப் பதிவுகள் மீது தானாக முன் வந்து தில்லி மகளிர் ஆணையம், எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரி டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் விரிவான நடவடிக்கை அறிக்கையை மே 26 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.