புதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி காமராஜ் நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜான்குமார், அவரது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் அதற்கான கடிதத்தை வழங்கியுள்ளார்.
புதுச்சேரியில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா செய்துள்ளது அம்மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்வது என சபாநாயகர் சிவக்கொழுந்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமயிலான அமைச்சரவை ராஜினாமா செய்ய இருப்பதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி மேலும் பரபரப்பைக் கூட்டி இருக்கிறது.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ''இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் என்னென்ன ஷரத்துகள் கூறப்பட்டுள்ளதோ அதன் அடிப்படையில் செயல்படுவோம். எதிர்க்கட்சிகள் எங்களைப் பதவி விலகச் சொல்வார்கள், ஆனால் எங்களுக்குப் பெரும்பான்மை இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்ட அந்த விதிமுறைப்படி செயல்படுவோம்'' என்றார்.