உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத் பகுதியில் வசித்து வந்தவர் விஜய் பிரதாப் சவுதான் (32). இவருடைய மனைவி ஷிவானி (28). இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இதற்கிடையில், விஜய்க்கும் ஷிவானிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று (10-01-25) தம்பதி இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ஷிவானி, வீட்டை விட்டு வெளியேறி வடகிழக்கு டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். மனைவி வெளியேறியதால் மனமுடைந்த விஜய், தனது மனைவிக்கு போன் செய்ததாகவும், அப்போது இனிமேல் உன்னை பார்க்கவே மாட்டேன் என ஷிவானி கூறியதாகவும் கூறப்படுகிறது.
சிறிது நேரம் கழித்து விஜய்யின் அத்தை மீரா என்பவர், அவரது வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது, விஜய் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதில் பதற்றமடைந்த மீரா, உடனடியாக நடந்த சம்பவத்தை ஷிவானியிடம் தெரிவித்துள்ளார். இந்த செய்தியைக் கேட்டதும், ஷிவானி தான் வசிக்கும் பகுதியில் உள்ள மின் கம்பத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காசியாபாத் போலீசாரும், டெல்லி போலீசாரும் இணை விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு இடங்களில் தற்கொலைக் குறிப்புகள் எதுவும் இல்லாததால், தடயவியல் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். கணவன் இறந்த செய்தியைக் கேட்டு மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.