உத்தரப் பிரதேச மாநிலத்தில், 12 ஆண்டுகளுக்குப் பின்பு மகா கும்பமேளா ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. கும்பமேளாவின் போது, கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் முக்கூட்டுச் சங்கமத்தில் பக்தர்கள் நீராட ஒன்று கூடுகின்றனர். இந்த நிகழ்வில், 40 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பலருக்கும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அழைப்பு விடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக ஜராவத் காட் என்ற இடத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது, “சர்ச்சைக்குரிய எந்த கட்டிடத்தையும் மசூதி என்று அழைக்கக்கூடாது. மசூதி என்று அழைப்பதை நிறுத்தும் நாளில், மக்கள் அங்கு செல்வதை நிறுத்திவிடுவார்கள். மசூதி போன்ற அமைப்பைக் கட்டி யாருடைய நம்பிக்கையையும் புண்படுத்துவது இஸ்லாமியக் கொள்கைகளுடன் ஒத்துப்போகாது. அத்தகைய இடங்களில் வழிபடுவது கடவுளாலும் ஏற்றுக்கொள்ளப்படாது.
சனாதனவாதிகள் வழிபாட்டிற்காக கோயில்களுக்கு செல்வது போல், எந்தவொரு கட்டமைப்பை இஸ்லாம் கட்டமைக்கவில்லை. எனவே, எந்தவொரு கட்டிடத்தையும் மசூதி என்று அழைப்பது தேவையற்றது மற்றும் எதிர்மறையானது. புதிய இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வையைத் தழுவி முற்போக்கு சிந்தனையுடன் முன்னேற வேண்டிய தருணம் இது. கடந்த கால சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளாமல் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பல் பகுதியில் உள்ள ஷாஹி ஜமா மசூதி, வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதி என பல்வேறு மசூதிகள், இந்து கோயில்களை இடித்துக் கட்டப்பட்டதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு அந்த விசாரணை நடைபெற்று வருகின்றன. இதில், ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள தொல்லியல் ஆய்வு நிறுவனத்திற்கு நீதிமன்றத்திற்கு அனுமதி அளித்திருக்கிறது. அதன்படி, தொல்லியல் ஆய்வு நிறுவனம் அங்கு ஆய்வு நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.