பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டு வெகுண்டு எழும் நாயகர்கள். இந்த மாதிரியான கதைகளம் கொண்ட எத்தனையோ படங்கள் தமிழ் சினிமாவில் நித்தம் வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த முறை இந்த ஃபார்முலாவை இயக்குநர் பாலா தனது ஸ்டைலில் கூறியிருக்கும் திரைப்படம் வணங்கான். ஒவ்வொரு இயக்குநரும் அவருக்கு ஏற்றார் போல் அவர்களது பேட்டர்னில் திரைக்கதை அமைத்து கொடுத்த இந்த கதையை பாலா தனது ஸ்டைலில் கொடுத்திருப்பதை ரசிகர்கள் எந்த அளவு வரவேர்த்தனர்...?
கன்னியாகுமரி மாவட்டத்தில் காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக இருக்கும் அருண் விஜய் தன் வளர்ப்பு தங்கையுடன் கிடைத்த வேலையை செய்து கொண்டு வாழ்க்கையை நடத்தி வருகிறார். கடும் கோபக்காரரான இவர் தன் கண் முன்னே பெண்களுக்கு எதிராக எதாவது அநீதி நடந்தால் பொங்கி எழுகிறார். அதே கன்னியாகுமரியில் கைய்டாக இருக்கும் நாயகி ரோஷினி பிரகாஷ் இவரை ஒருதலையாக காதலிக்கிறார். அருண் விஜய்க்கு ஒரு பொறுப்பான வேலையை ஒரு மாற்றுத்திறனாளிகள் இருக்கும் ஆசிரமத்தில் வாங்கி கொடுக்கிறார். அந்த ஆசிரமத்தில் வேலை செய்யும் அருண் விஜய் அங்கு பார்வையற்ற பெண்கள் குளிக்கும் பொழுது மூன்று நபர்கள் மறைந்திருந்து திருட்டுத்தனமாக ஆபாச நோக்கத்தோடு பார்க்கின்றனர். இதைக் கண்ட அருண் விஜய் அதிலிருக்கும் இருவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு போலீசில் சரண் அடைந்து விடுகிறார்.
அவர் தான் ஏன் கொன்றேன் என்ற விஷயத்தை போலீசில் சொல்ல மறுக்கிறார். இதனால் கொலை குற்றத்துக்கான பின்னணி தெரியாததால் அவருக்கு ஜாமீன் கிடைக்கிறது. வெளியே வந்த அவர் மூன்றாவது நபரையும் தேடி கொடூரமாகக் கொலை செய்கிறார். அருண் விஜய் ஏன் இவர்களைக் கொன்றார் என போலீசார் ஒரு பக்கம் தலையைப் பிய்த்து கொள்ள அருண் விஜய் ஜெயிலுக்கு சென்று விடுகிறார். உள்ளே சென்ற அருண் விஜய் வெளியே வந்தாரா, இல்லையா? இந்த கொலைக்கான காரணத்தை போலீசார் கண்டுபிடித்தார்களா, இல்லையா? என்பதே வணங்கான் படத்தின் மீதி கதை.
சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை செய்பவர்களை மிருகத்தனமாக தண்டிக்கும் கதாபாத்திரத்தை உருவாக்கி அதன் மூலம் பார்ப்பவர்களுக்கு கலங்கடிக்கும்படியான தனது ஸ்டைலிலேயே மீண்டும் ஒரு கனமான படத்தை கொடுத்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் பாலா. வழக்கமான பாலா ஸ்டைலிலேயே இந்த படத்தை கொடுத்த அவர் இந்த காலகட்டத்திற்கு ஏற்றார் போல் வெர்ஷன் 2.0 ஆக சற்று பட்டி டிங்கரிங் பார்த்து திரைக்கதை அமைத்து இக்கால ரசிகர்களும் ரசிக்கும் படியான ஒரு பழைய பாலா படத்தைக் கொடுத்து மீண்டும் ஒருமுறை கவனம் பெற்று இருக்கிறார். ஒரு சாதாரணமான கதை அதில் நடித்திருக்கும் கதை மாந்தர்களும் சாதாரண மனிதர்கள் அவர்களுக்குள் இருக்கும் இக்காலகட்டத்திற்கு ஏற்ற முக்கியமான பிரச்சினையை கையில் எடுத்த இயக்குநர் பாலா அதை தன் ஸ்டையிலிலேயே சிறப்பாக கையாண்டு பார்ப்பவர்களுக்கும் அயற்சி ஏற்படாதவாறு ஒரு அழுத்தமான படத்தை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.
முந்தைய பாலா படங்களில் ஆழமும், அழுத்தமும், கண் கலங்க வைக்கும் படியான காட்சி அமைப்புகளும் மிகுதியாக காணப்படும். ஆனால் இந்தப் படம் ஆரம்பித்து போகப் போக கலகலப்பாகவும் அதேசமயம் கதையை மீறிய விஷயங்கள் எதுவும் இல்லாமல் அழுத்தமாகவும் சென்று லைட் ஹார்ட்டட் பாலா படமாக அமைந்திருக்கிறது. தன் முந்தைய படங்களில் இருக்கும் கதை மாந்தர்கள் போலவே இந்த படத்திலும் கதை மாந்தர்களை அமைத்து அவர்களுக்கு சற்றே இக்காலகட்டத்திற்கு ஏற்றார் போல் உடல் மொழிகளையும், காட்சி அமைப்புகளையும் மாற்றி ரசிக்கும்படி கொடுத்த இயக்குநர் பாலா இன்னமும் திரைக்கதைக்கு சுவாரசியம் கூட்டி இருந்திருக்கலாம். இருந்தும் அவை படத்திற்கு பெரிதாக பாதகமாக இல்லாதது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.
நாயகன் அருண் விஜய் படம் முழுவதும் சைகை மொழியிலேயே பேசி பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்கிறார். இதற்கு முன் இருந்த அருண் விஜய் வேறு இந்தப் படத்தில் இருந்து அருண் விஜய் வேறு என்பது போல் அவரை நடிப்பில் அடுத்த பரிமாணத்திற்கு கூட்டி சென்று இருக்கிறார் இயக்குநர் பாலா. குறிப்பாக தங்கையுடன் சேர்ந்து அழும் காட்சிகளில் மிகவும் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். சின்ன சின்ன முக பாவனைகள் மற்றும் உடல் மொழிகள் மூலம் தான் சொல்ல வந்த விஷயத்தை மிக சிறப்பாக நம்முள் கடத்தி தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார் அருண் விஜய்.
அருண் விஜய்யுடன் போட்டி போட்டுக் கொண்டு யார் இந்த ரோஷினி பிரகாஷ் எனக் கேள்வியை கேட்க வைக்கும் அளவுக்கு மிக மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் நாயகி ரோஷினி பிரகாஷ். ஜடா படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர் இந்த படத்தில் மிகவும் துறுதுறு பெண் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்து படத்திற்கும் திரைக்கதைக்கும் வேகம் கூட்டும் படியான வேலையை கலகலப்பாக செய்து படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார். இவர் வரும் காட்சிகள் எல்லாம் தியேட்டரில் கலகலப்பாக அமைந்திருக்கிறது. அதேசமயம் காதல் காட்சிகளிலும் அருண் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் கூட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற நடிகைகள் வரிசையில் இணைந்து இருக்கிறார். இப்படம் மூலம் இவருக்கு நல்ல எதிர்காலம் அமைந்திருக்கிறது.
கௌரவத் தோற்றத்தில் வரும் மிஷ்கின் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து படத்திற்கும் பக்கபலமாக அமைந்திருக்கின்றனர். மற்றபடி பாலா படங்களுக்கே உரித்தான துணை நடிகர்கள் பெரும்பாலானவர்கள் அவரவர் வேலையை மிக மிக சிறப்பாக செய்து படத்திற்கும் சிறப்பு சேர்த்து இருக்கின்றனர். அருண் விஜய்யின் தங்கையாக வரும் ரிதா யார் இவர் என கேட்க வைக்கும் அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். இவருக்கும் அருண் விஜய்க்குமான கெமிஸ்ட்ரி அண்ணன் தங்கை பாசமாக சிறப்பாக அமைந்து நடிப்பிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து பார்ப்பவர்களிடம் கைதட்டல் பெற்றிருக்கிறது. வழக்கம்போல் இயக்குநர் பாலா தன் படங்களில் கதாபாத்திரங்களைச் செதுக்கி விடுவார், அந்த வகையில் இந்தப் படத்திலும் அதைச் சிறப்பாகவே செய்து நடிகர் நடிகைகளைச் சிறப்பாக வேலை வாங்கி அவர்களும் அந்த வேலையைச் சிறப்பாகச் செய்து படத்திற்கும் பிளஸ் கூட்டி இருக்கின்றனர்.
ஜீ.வி பிரகாஷ் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை சாம் சி எஸ் வழக்கத்திற்கு மாறாக அமைதியான இசையைக் கொடுத்து பார்ப்பவர்களுக்கு ஃபீல் குட் உணர்வை கொடுத்திருக்கிறார். ஜீ.வி பிரகாஷ் இசையில் பாடல்கள் கேட்கும் பொழுது ரசிக்கும் படி இருந்தாலும் போகப் போக அவை மனதில் நிற்க மறுக்கின்றன. பொதுவாக பாலா படம் என்றாலே ஓரிரு பாடல்கள் சிறப்பாக அமைந்து நம் மனதில் ரிப்பீட் மோடில் ஒலித்துக் கொண்டிருக்கும் படி அமையும். ஆனால் இந்த படத்தில் அவை சற்றே மிஸ்ஸிங். ஆர் பி குருதேவ் ஒளிப்பதிவில் கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார காட்சிகள் சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த காலகட்டத்திற்கு ஏற்ப டிரெண்டை மாற்றிக் கொள்ளாமல் தனக்கு என்ன வருமோ அந்தப் பாணியிலேயே திரைக்கதை அமைத்து அதை இந்த ட்ரெண்டுக்கு ஏற்ப ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் பட்டி டிங்கரிங் பார்த்து ஒரு ஃபீல் குட் வெற்றி படத்தை கொடுத்து மீண்டும் கம்பேக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் பாலா.
வணங்கான் - காவலன்!