புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த 3 பேர், திருபுவனை பகுதியை சேர்ந்த ஒருவர் என 4-பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் வசித்த பகுதிகள் சீல் வைக்கப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அப்பகுதியில் பொதுமக்கள் வெளியே செல்லவும், உள்ளே வரவும் தடை செய்யப்பட்டு 24 மணிநேரமும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா அறிகுறியால் சீல் வைக்கப்பட்டுள்ள அரியாங்குப்பம் பகுதியில் வசித்து வரும் காவல் ஆய்வாளர் மற்றும் திருபுவனை பகுதியில் வசித்து வரும் காவலர்கள், அங்கு பணியாற்றிய காவலர்கள் என 21 பேரை தங்களது வீட்டிலியே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என முதுநிலை காவல்துறை கண்காணிப்பாளர் ராகுல் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர்கள் தங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நாட்கள் அனைத்தும் பணி நாட்களாகவே கருதப்படும் என்றும், பணியில் இருக்கும் ஐ.ஆர்.பி.என் காவலர்களுக்கு எப்போதும் வழங்கப்படும் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.