சுவிட்சர்லாந்து (SWITZERLAND) நாட்டில் உள்ள வங்கிகளில் உலக நாடுகளை சேர்ந்த தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் என அனைவரும் தங்கள் பணத்தை சுவிஸ் வங்கிகளில் சேமித்து வருகின்றனர். இந்த நாட்டில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்யும் நபர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது விவரங்களை வெளியிடாமல் பாதுகாத்து வந்தது. இதனால் இந்தியாவில் பெரும்பாலானோர் சுவிஸ் வங்கிகளில் பணத்தை சேமித்து வருகின்றன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியிருக்கும் பணத்தை இந்தியா கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

இது தொடர்பாக இந்திய அரசு இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் தொடங்கியுள்ள வங்கிக்கணக்கு தொடர்பான விவரங்களை கேட்டு சுவிட்சர்லாந்து அரசிடம் தொடர்ந்து பேசி வந்தது. இந்நிலையில் வெளிநாட்டினர் தங்கள் நாட்டு வங்கிகளில் சேமித்து வரும் பணம் குறித்த விவரங்களை சுவிட்சர்லாந்து மத்திய வங்கி ஆண்டுதோறும் அறிக்கையாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்து வங்கிகளில் இருந்த வெளிநாட்டினரின் மொத்த தொகை குறித்த புள்ளி விவரங்களை நேற்று வெளியிட்டது. அதன் படி கடந்த 2018- ஆம் ஆண்டில் சுவிஸ் நாட்டு வங்கிகளில் இருந்த இந்தியர்களின் மொத்த சேமிப்பு தொகையின் சுமார் ரூபாய் 6,757 கோடி ஆகும்.

இந்த சேமிப்பு தொகை முந்தைய ஆண்டை விட 6 சதவீதம் குறைந்து உள்ளதாக சுவிட்சர்லாந்து மத்திய வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த தகவலை அறிந்து மத்திய அரசு அதிர்ச்சி அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏனெனில் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் லட்சக்கணக்கான கோடியில் பணம் சேமித்து வைத்திருப்பதாக அரசியல் கட்சிகள் தெரிவித்து வந்த நிலையில், சுவிட்சர்லாந்து அரசு வெளிட்ட அறிக்கையில் குறைவான தொகையே இடம் பெற்றுள்ளது. அதே போல் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் சேமித்து வரும் தொகை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வங்கிகளில் சேமிக்கும் தொகை என்பது இந்திய அரசால் கருப்புப்பணமாக் கருதப்படுகிறது.